பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான சமிந்த விஜேசிறியை ஒருபோதும் கைவிடமாட்டோமெனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,மேன்முறையீட்டு நடவடிக்கைகள் ஊடாக அவருக்கு நீதி கிடைக்கச் செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார். சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், நீதித்துறையை மதிக்க வேண்டியது அவசியம். என்றாலும், இறுதியில் சமிந்த விஜேசிறிக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக கூறினார்.
“சமிந்த விஜேசிறி பதுளை மாவட்டத்திற்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் மட்டுமல்ல, முழு இலங்கை மக்களுக்கும் வலிமையான ஒருவராக இருக்கிறார். மக்களின் பிரச்சினைகள் குறித்து அவர் தமது அரசியல் மற்றும் பாராளுமன்றப் பணிகள் ஊடாக அச்சமின்றி குரல் கொடுத்துள்ளார். நாங்கள் அவருடன் தொடர்ந்து இருப்போம். அவருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை நீதித்துறை மீது எமக்குள்ளது” என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பதுளை மேல் நீதிமன்றம் சமிந்த விஜேசிறிக்கு நேற்று (28) ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததைத் தொடர்ந்து அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். பொலிஸ் அதிகாரிகளை சட்டவிரோதமாகத் தடுத்து நிறுத்தியமை, தாக்கி காயப்படுத்தியமை மற்றும் குற்றவியல் அச்சுறுத்தல் விடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.2019 ஆம் ஆண்டு பண்டாரவளை சுற்றுவட்டத்திற்கு அருகில், பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை பொலிஸ் ஜீப் ஒன்று முந்திச் சென்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மோதலின் போது பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்பட்டதுடன், அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டதாக அரசுத் தரப்பு வழக்கில் தெரிவிக்கப்பட்டிருந்தது.




