‘இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை’ தான் என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டு, அதற்கு எதிராகச் சர்வதேச நீதி விசாரணையை முன்னெடுக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) விசேட தூதுக்குழுவிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட தூதுக்குழுவினர், நேற்று செம்மணி மனித புதைகுழியில் இடம்பெற்று வரும் அகழ்வுப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதன்போது தூதுக்குழுவினரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அங்கே கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளாக வடக்கு–கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி யோகராசா கனகரஞ்சினி உள்ளிட்ட இருவரை அழைத்து ஐரோப்பிய ஒன்றியத்தினர் கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தனர். இதன்போதே வடக்கு- – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி யோகராசா கனகரஞ்சினி இக்கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி புதைகுழி வளாகத்தில் ஐரோப்பிய ஒன்றிய விசேட தூதுக்குழுவினரைச் சந்தித்து, எங்களின் உயிருக்கு மேலான கோரிக்கை மகஜரைக் கையளித்திருக்கிறோம்.
எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை எமக்குத் தெரிய வேண்டும். இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதைச் சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும். அதனடிப்படையில் சர்வதேச நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இலங்கை அரசாங்கத்தால் அமைக்கப்படும் OMP (காணாமல் போனோர் பற்றிய அலுவலகம்) போன்ற உள்நாட்டுப் பொறிமுறைகளையோ அல்லது உள்நாட்டு விசாரணைகளையோ நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். உள்நாட்டு அமைப்புகள் எமக்கான நீதியை ஒருபோதும் வழங்கப்போவதில்லை. பல ஆணைக்குழுக்களையும் அரசுப் பிரதிநிதிகளையும் சந்தித்தும் எமக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை என்பதால் தான் சர்வதேச விசாரணையை கோரி நிற்கிறோம்.
நீதிக்கான இப் போராட்டத்தில் இதுவரை 450ற்கும் மேற்பட்ட உறவினர்கள் நீதியை காணாமலேயே மரணித்துவிட்டார்கள். இறுதிப்போரின் போதும் அதன் பின்னரும் கையளிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதைச் சர்வதேச சமூகம் தான் கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டும். குற்றவாளிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்.
நாங்கள் கையளித்த இந்த அறிக்கை வெறும் காகிதமல்ல, எங்களது உயிரையே உங்களிடம் ஒப்படைத்திருக்கிறோம் என்ற நம்பிக்கையோடு வழங்கி உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.




