அரசியல் கைதிகள் என்று எவரும் நீதிமன்றத்தால் விளக்கமறியலிலோ அல்லது தடுப்புக் காவலிலோ வைக்கப்படவில்லை என்றும் அதற்கிணங்க அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தில் அரசியல் கைதி என்பற்கு பொருட்கோடல் வழங்கப்படவில்லை என்றும் சிறைச்சாலையில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார். முன்னாள் நீதியரசர் துரைராசா சமர்ப்பித்துள்ள அறிக்கைக்கு அமைய கைதிகளின் தண்டனைக் காலத்தை குறைக்கவும், பொது மன்னிப்பு வழங்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஐக்கிய மக்கள் சக்தி எம் பி அஜித் பி பெரேரா எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சிறைச்சாலை கட்டளைச் சட்டம் மற்றும் ஏனைய சிறைச்சாலை ஒழுங்குவிதிகளில் அரசியல் கைதிகள் என்று வேறுப்படுத்தப்பட்ட குழு தொடர்பில பொருட்கோடல் வழங்கவில்லை. அந்த வகையில் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருட்கோடலை நாம் ஏற்றுக் கொள்கிறோம். நீதிமன்றத்தின் ஊடாக கைதிகள் சந்தேக நபராகவோ அல்லது குற்றவாளிகளாகவோ அடையாளப்படுத்தப்படுகிறார்கள். அரசியல் கைதிகள். என்று எவரும் நீதிமன்றத்தால் விளக்கமறியலிலோ அல்லது தடுப்புக் காவலிலோ வைக்கப்படவில்லை. அதற்கமைய அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.




