பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறை!

1 Min Read

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் கோரிக்கை குறித்து இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்துள்ளது பாஜக அரசு என திமுக எம்.பி., கனிமொழி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கனிமொழி பதிவிட்டுள்ளதாவது,

”கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஏற்பாடு செய்திருந்த பாராளுமன்றப் பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் இளம் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நமது கல்வி முறையில் உள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த தீவிரமான கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்குப் பதிலாக, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதிலாக மிருகத்தனமான வன்முறையை பாஜக அரசு தேர்ந்தெடுத்துள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.

நீட் மோசடியைக் கண்டித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி நேற்று ஜூன் 20 ஆம் திகதி முதல் தில்லி ஜந்தர் மந்தர் திடலில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தில் 21 நாள்களாக உண்ணாவிரதம் இருந்துவந்த லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கை நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில்  தூக்கிச் சென்று பொலிஸார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். டில்லியில் உள்ள சஃப்தார்ஜங்க் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் சோனம் வாங்சுக் திட்டமிட்டிருந்தபடி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர்.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்றுக்காலை தொடங்கிய நிலையில், ஜந்தர் மந்தரில் இருந்து அமைதியான முறையில் பேரணி தொடங்கியது.

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்ற நிலையில், பலத்த காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் மூலம் பேரணியில் ஈடுபட்டவர்களை அரசு தடுத்து நிறுத்தியது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டில்லி முழுவதும் 163 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பதால், சிஜேபி போராட்டத்துக்கு பொலிஸார் அனுமதி மறுத்தனர். பேரணியாக வருவோரைத் தடுக்கும் வகையில் பாராளுமன்ற வளாகத்தில் ஆயுதம் ஏந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *