ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளதால் மத்திய கிழக்கில் பதற்றங்கள் அதிகரித்துள்ளன. இந்த அறிவிப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியானதையடுத்து ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தியது.இதற்குப் பதிலடியாக பஹ்ரைன், குவைத், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளை ஈரான் கடுமையாகத் தாக்கியதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. ஈரான் – அமெரிக்கா இடையே கடந்த ஜூன் 17-ம் திகதி அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது.எனினும், ஈரானின் கடலோர பகுதியில் உள்ள வழித்தடத்தில்தான் கப்பல்கள் செல்ல வேண்டும் என்றும், ஓமான் கடற்கரையை பயன்படுத்தி ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சென்றால் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் தெரிவித்திருந்தது. இந்நிலையில், மார்ஷல் தீவு எண்ணெய்க் கப்பல் அல் ரெஹாயத், சவூதி கப்பல் வெட்யான், லைபீரியா கப்பல் சைப்ரஸ் ப்ராஸ்பெரிட்டி ஆகிய 3 எண்ணெய் கப்பல்கள் ஓமான் கடற்கரையூடாக ஹோர்முஸ் நீரிணையை சமீபத்தில் கடந்தன. அவற்றின் மீது ஈரான் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதையடுத்து பதிலுக்கு ஈரான் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ஈரான் இராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஹோர்முஸ் நீரிணை அடுத்த அறிவிப்பு வரும் வரையிலும், இப்பகுதியில் அமெரிக்கத் தலையீடுகள் முடிவுக்கு வரும் வரையிலும் மூடப்பட்டிருக்கும். எந்தக் கப்பலும் இதன் வழியாகச் செல்ல அனுமதிக்கப்படாது. இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் பதிலடி நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்” என்று எச்சரித்தது.
இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, ஹோர்முஸ் வழியாக சென்ற சைப்ரஸ் நாட்டுக்குச் சொந்தமான கொள்கலன் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறி, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்களைத் தொடங்கியது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, அமெரிக்க இராணுவம் தெரிவித்ததுள்ளது. ‘சுமார் நான்கு மணி நேரம் கழித்து, தாக்குதல்கள் நிறைவடைந்தன.




