அநுராதபுரம் மாவட்டத்தில் மஹகனந்தராவ, நாச்சியாதீவு மற்றும் மஹாவிலச்சிய ஆகிய பிரதேசங்களினூடாக அமைந்துள்ள சரணாலயங்கள் மற்றும் வனப்பகுதிகளை இணைக்கும் பாரம்பரிய யானை வழித்தடங்களை (Elephand Corridors) விடுவிப்பதற்கான முதற் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் அநுராதபுரம் மாவட்டத்தில் காட்டு யானைகள் அதிகமாக பயன்படுத்தப்படும் இடம் பெயர்வுப் பாதைகள் GPS மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விரைவாக வரைபடம் ஆக்கப்பட்டுள்ளதுடன். அவை உடனடியாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாக்கப்பட்ட வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி மேற்படி மாவட்டத்தின் மஹகனந்தராவ மற்றும் நாச்சியாதீவு ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட யானை வழிநடத்தை சரணாலயமாகப் பெயரிடுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
காட்டு யானைகளின் இயற்கையான நடத்தை முறைகளுக்கும் அவற்றின் பாரம்பரிய இடப்பெயர்வு முறைகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அவை சுதந்திரமாக நடமாடுவதற்கு இடமளிப்பதும் அதன் மூலம் மனித _ யானை மோதலுக்கு நீண்ட கால அறிவியல் ரீதியான தீர்வுகளை வழங்குவதும் இதன் நோக்கமாகும்.
மேலும் மக்கள் சக்தி அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் கொள்கையை நடைமுறைப்படுத்தி ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களை மையமாகக் கொண்டு கொஹெலங்கல, ஹந்தபானகல மற்றும் வெட்டஹிரகந்த ஆகிய மூன்று முக்கிய யானை வழித்தடங்கள் ஏற்கெனவே வர்த்தமானி மூலம் உத்தியேகபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டு திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




