தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப்: வன்னி மாற்றுத்திறனாளிகள் வெற்றி

1 Min Read

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தளராமல், அயராத முயற்சியுடன் வெற்றிகளை நோக்கி பயணிக்கும் இந்நாட்டு பாரா விளையாட்டுத் துறையின், 2026 தேசிய திறந்த பாரா தடகள ஆண்கள் பிரிவின் சாம்பியன்ஷிப் பட்டத்தை இலங்கை காலாற்படை வென்றெடுத்தது. அதேவேளை, பெண்கள் பிரிவின் இணைச் சம்பியன்ஷிப் பட்டத்தை வன்னி மாற்றுத்திறனாளிகளுக்கான புனர்வாழ்வு நிறுவனம் மற்றும் இரத்மலானை விழி இழந்தோர் பாடசாலை ஆகியன வென்றெடுத்தன.

எத்தனையோ கஷ்டங்கள் மற்றும் தடைகள் இருந்தபோதிலும், உள்நாட்டு மற்றும் சர்வதேச விளையாட்டு அரங்கில் தொடர்ந்து வெற்றிக்கொடிகளை நாட்டிய சமித்த துலான், F64 பிரிவின் ஈட்டி எறிதலில் 62.46 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து தங்கப் பதக்கம் வென்றதுடன், இத்தொடரின் மிகச்சிறந்த ஆண் விளையாட்டு வீரருக்கான விருதையும் தட்டிச்சென்றார். அதேபோன்று, T47 பிரிவின் நீளம் பாய்தலில் 5.38 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து வெற்றி பெற்ற ஜனனி தனஞ்சனா, இத்தொடரின் மிகச்சிறந்த பெண் விளையாட்டு வீராங்கனைக்கான விருதை பெற்றுக்கொண்டார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டியாகவும் அமைந்த இந்தப் போட்டி, தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் 10 புதிய சாதனைப் பதிவுகளும், பெண்கள் பிரிவில் 10 புதிய சாதனைப் பதிவுகளும் நிலைநாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பாரா விளையாட்டு வீரர்களின் இருப்பு, அவர்களின் வளர்ச்சி மற்றும் வெற்றிகளை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் பங்களிப்பு வழங்கி வரும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, கடந்த 26 வருடங்களாகத் தனது தொடர்ச்சியான ஆதரவை வழங்கி, இந்நாட்டு பாரா விளையாட்டின் பிரதான அனுசரணையாளராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.​

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *