மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 142 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்தபோதும் ஆட்டத்தில் ஒருநாள் மாத்திரமே எஞ்சியிருந்த நிலையில் இந்த டெஸ்ட் போட்டி சமநிலையை நெருங்கி இருந்தது.
அன்டிகுவாவில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியின்; நான்காவது நாளான நேற்று முன்தினம் (06) தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் 165.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 499 ஓட்டங்களைப் பெற்றது. ஜஸ்டின் கிரீல் (180) மற்றும் ஷாய் ஹோப் (112) ஆகியோர் சதம் பெற்றனர். பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 5 விக்கெட்டுகளை பதம்பார்த்ததோடு பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 549 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 50 ஓட்டங்களால் முன்னிலை பெற்றே தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. நான்காவது நாள் ஆட்ட நேர முடிவின்போது இலங்கை அணி இரண்டாவது இன்னிஸில் 22 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 92 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இலங்கை அணி முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியுற்ற நிலையில் தொடர் தோல்வியை தவிர்க்க இந்த டெஸ்ட் போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நெருக்கடி இருந்தது.




