சிவப்பு அட்டை பெற்று ஒரு போட்டித் தடைக்கு உள்ளான அமெரிக்க வீரர் பொலரின் பலோகன் மீதான தடையை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) சர்ச்சைக்குரிய முறையில் இடைநிறுத்தியதை அடுத்து அவர் பெல்ஜியத்திற்கு எதிரான 16 அணிகள் சுற்றில் ஆட தகுதி பெற்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தலையீட்டை அடுத்தே பிஃபா இந்த முடிவை எடுத்துள்ளது.
இம்முறை பிஃபா உலகக் கிண்ணத்தில் அமெரிக்க அணிக்காக அதிக கோல்கள் பெற்றவராக இருக்கும் 25 வயது பலோகன், பொஸ்னியா – ஹெர்சகோவினாவுக்கு எதிரான 32 அணிகள் சுற்றின்போது முறையற்ற ஆட்டத்திற்காகவே சிவப்பு அட்டை பெற்றார். எனினும் அந்தப் போட்டியில் அமெரிக்கா 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டி 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறியது.
இந்நிலையில் பலோகன் மீதான ஒரு போட்டித் தடை ஓர் ஆண்டுக்கு இடைநிறுத்தப்படுவதாக பிஃபா குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்த முடிவுக்கான காரணத்தை அது கூறவில்லை. இந்த முடிவு அறிவிக்கப்பட்ட உடன் ‘பெரும் அநீதி முடிவு ஒன்றை மாற்றியதற்காக’ பிஃபாவுக்கு நன்றி கூறுவதாக டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.
முன்னதாக பலோகன் சிவப்பு அட்டை பெற்றதை அடுத்து பிஃபா தலைவர் கியானி இன்பென்டினோவை தொலைபேசியில் அழைத்த டிரம்ப் அந்த முடிவை மாற்றக் கோரியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிஃபாவின் முடிவால் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் இதற்கு பதில் அளிக்கும் வகையில் ‘சாத்தியமான அனைத்து வழிகளையும் ஆராய்ந்து வருவதாகவும்’ பெல்ஜியம் கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான காலிறுதிக்கு முந்திய போட்டி இலங்கை நேரப்படி இன்று (07) சியாட்டிலில் நடைபெறுகிறது.




