இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழாம் அதிகாரிகள், தமது செயற்பாடுகளை நிறைவு செய்து நேற்றைய தினம் நாட்டிலிருந்து புறப்பட்டனர்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் ‘விரிவாக்கப்பட்ட நிதி வசதியின்’ கீழ் செயல்படுத்தப்படும் பொருளாதார சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடுவதற்காக மேற்படி பணிக்குழாமினர் கடந்த 24ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழலுக்கு மத்தியிலும், இலங்கை அரசாங்க அதிகாரிகள் மேற்கொண்ட விரைவான நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க முடிந்துள்ளதாக இந்த கலந்துரையாடலின் போது சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதானி ஈவன் பெபஜியோர்கி தெரிவித்திருந்தார்.
அத்துடன், நாட்டில் செயற்படுத்தப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டம் காரணமாக இவ்வாறான நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதற்குத் தேவையான பலம் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




