இலங்கையில் அதிகரித்து வரும் இரத்த அழுத்தப் பாதிப்பு, அதனை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் முக்கியத்துவம், வழக்கமான பரிசோதனைகள் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை பெறுதல் ஆகியன குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில், ‘Hypertension Society of Sri Lanka’ (இலங்கை இரத்த அழுத்த சங்கம்), Sri Lanka College of Internal Medicine (இலங்கை உள்ளக மருத்துவக் கல்லூரி) உடன் இணைந்து ‘Hypertension Summit 2026’ (இரத்த அழுத்த மாநாடு 2026) இனை அறிவித்துள்ளது. இலங்கையில் இரத்த அழுத்த பராமரிப்பை மேம்படுத்துவதற்காக, ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், சுகாதார நிபுணர்கள், ஏனைய பங்குதாரர்களை ஒன்றிணைத்து, நோய் கண்டறிதல், சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகளின் நவீன விடயங்கள் குறித்து இந்த மாநாடானது விவாதிக்கவுள்ளது.
இதய நோய், பக்கவாதம், சிறுநீரக நோய், இளவயது மரணம் ஆகியன ஏற்படுவதற்கான மிக முக்கிய ஆபத்தான காரணிகளில் ஒன்றாக இரத்த அழுத்தம் விளங்கி வருகிறது.
தீவிரமான ஆரோக்கிய பாதிப்புகளைக் கொண்டிருந்த போதிலும், பலர் எந்தவித அறிகுறியும் இன்றி இந்த நோயுடன் வாழ்ந்து வருவதால், அது கண்டறியப்படாமலேயே போய்விடுகிறது.
“உங்கள் அளவை அறிந்திடுங்கள், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துங்கள், உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாத்திடுங்கள்” (Know Your Numbers, Control Your Pressure, Protect Your Future) எனும் கருப்பொருளின் கீழ் இடம்பெறவுள்ள இந்த மாநாடானது, தடுப்பு முறைகளை வலுப்படுத்துதல், நோய் கண்டறிதல், சிகிச்சையை மேம்படுத்துதல் மற்றும் இலங்கையின் சுகாதாரத் துறைக்குள் கூட்டு முயற்சியை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தவுள்ளது.




