கடந்த தசாப்தத்தில் இந்தியாவின் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள சீர்திருத்தங்கள், உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை அடைவதில் நாட்டை ஒரு முன்னணி முன்மாதிரியாக மாற்றியுள்ளன. இது குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட ‘குளோபல் சவுத்’ நாடுகளுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக உருவெடுத்துள்ளது என்று ‘தி டைம்ஸ் குவைத்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மாற்றத்தின் மையப்புள்ளியாக விளங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம், நிதிப் பாதுகாப்பு, ஆரம்ப சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துதல், டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் மற்றும் மருந்துத் துறையில் சுயசார்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. இது வெறும் நலத்திட்டமாக இல்லாமல், குடிமக்களின் அரசியலமைப்பு உரிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் இயங்கும் ‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா’ (PM-JAY), பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடும்பங்களுக்கு இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவச் சிகிச்சைகளுக்காக ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு வழங்குகிறது. 2018-ல் தொடங்கப்பட்டதிலிருந்து, இதுவரை 7.8 கோடிக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு பயனடைந்துள்ளனர். இதன் மூலம் மக்களுக்கு சுமார் 1.25 லட்சம் கோடி ரூபாய் வரை மருத்துவச் செலவு மிச்சமாகியுள்ளது.
அண்மைய விரிவாக்கங்களின்படி, வருமான வரம்பு இல்லாமல் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து முதியவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கிராமப்புற, நகர்ப்புற மற்றும் பழங்குடியின பகுதிகளில் 1,84,000 இற்கும் அதிகமான ஆரம்ப சுகாதார மையங்கள் மேம்படுத்தப்பட்டு, தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான மருத்துவச் சேவைகளை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு சேர்த்துள்ளன.
2025 ஆம் ஆண்டில் மட்டும் இந்த மையங்கள் மூலம் 42.6 கோடிக்கும் அதிகமான ‘டெலி-கன்சல்டேஷன்’ (தொலைதூர மருத்துவ ஆலோசனை) வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தின் கீழ் 86.3 கோடிக்கும் அதிகமான டிஜிட்டல் சுகாதாரக் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. ‘டெலி மானஸ்’ தளம் மூலம் 24 மணி நேர மனநல ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.
‘i-DRONE’ முன்முயற்சியின் கீழ், தொலைதூரப் பகுதிகளுக்குத் தடுப்பூசிகள், கண்டறியும் கருவிகள் மற்றும் அவசர மருத்துவப் பொருட்களை விநியோகிக்க டிரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
காப்பீட்டு அட்டைகளில் பாதியளவுக்கு மேல் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், ‘பிரதான் மந்திரி பாரதிய ஜன்அவ்ஷதி பரியோஜனா’ (PMBJP) மற்றும் ‘அம்ரித்’ (AMRIT) மருந்தகங்கள் மூலம் மருந்துகளின் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டு, ஏழை எளிய மக்களுக்குக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த உள்நாட்டுச் சீர்திருத்தங்கள், இந்தியாவை உலகளாவிய மருந்து விநியோக மையமாக நிலைநிறுத்தியுள்ளன. குறிப்பாக, வளரும் நாடுகளுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை இந்தியா வழங்கி வருகிறது. கோவிட்-19 பெருந்தொற்று காலத்தின் போது, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘கோவாக்சின்’ மற்றும் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் உலகளவில் முக்கியப் பங்காற்றின.




