அரையிறுதிக்கான சிறு வாய்ப்புடன் இலங்கை அணி இன்று களத்தில்

1 Min Read

மகளிர் டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி தனது கடைசி குழுநிலை போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான குறுகிய வாய்ப்பு ஒன்றுடன் இன்று (26) ஸ்கொட்லாந்தை எதிர்கொள்ளவுள்ளது.

மான்செஸ்டரில் இரவு 11 மணிக்கு ஆரம்பமாகும் இந்தப் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேற இலங்கை அணி கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்றபோதும் அந்த வாய்ப்பை பெற அது மாத்திரம் போதாது. சமரி அத்தபத்து தலைமையில் இலங்கை அணி இதுவரை ஆடிய நான்கு போட்டிகளில் இரண்டு வெற்றி இரண்டு தோல்விகளுடன் குழு 2 இல் நான்காவது இடத்தில் உள்ளது.

குழு இரண்டில் இருந்து ஏற்கனவே போட்டியை நடத்தும் இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றிருப்பதோடு எஞ்சிய ஓர் இடத்திற்கு மேற்கிந்திய தீவுகள் மற்றும் நடப்புச் சம்பியன் நியூசிலாந்து அணிகளுடனேயே இலங்கை போட்டியிடுகிறது.

இதில் 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் மேற்கிந்திய தீவுகள் தனது கடைசி குழுநிலை போட்டியில் நாளை அயர்லாந்தை எதிர்கொள்ளவிருப்பதோடு அதில் மேற்கிந்திய தீவுகள் வென்றால் அது அரையிறுதியை உறுதி செய்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இன்றைய போட்டியில் இலங்கை அணி நிகர ஓட்ட விகிதத்தை அதிகரித்து வெற்றியீட்டுவதுடன் மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து அணிகள் தனது கடைசி குழுநிலை போட்டிகளில் தோல்வியுறும் பட்சத்திலேயே இலங்கை அணியால் தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய முடியுமாக இருக்கும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *