பிரான்ஸில் வெப்ப அலை நிலவிவரும் சூழலில் அந்நாட்டின் வடமேற்கு மாகாணமான ஃபினிஸ்டெரில் உள்ள ஒரு மின்மாற்றியில் நேற்று ஏற்பட்ட வெப்பம் தொடர்பான விபத்தால் சுமார் 68,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்திய தீவிர வெப்ப அலை வானிலையின் விளைவாக நாட்டில் ஏற்பட்ட முதலாவது மிகப் பெரிய மின் துண்டிப்பு என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
நேற்று முன்தினம் பின்னிரவில் ஏற்பட்ட இம் மின்துண்டிப்பை சரிசெய்ய குழுக்கள் இரவு முழுவதும் பணியாற்றிய போதிலும், நேற்று வரையும் மின்சாரம் முழுமையாக மீட்டெடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிரான்ஸ் மக்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இந்த வெப்ப அலையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரிட்டனி முதல் பாரிஸ் வரையிலும், தென்மேற்குப் பகுதியின் பெரும்பாலான இடங்களிலும் 39 பாகை செல்சியஸ் முதல் 41பாகை செல்சியஸ் வரை நேற்று வெப்பநிலை நிலவும் என எதிர்பார்க்கப்பட்டன.
இதேவேளை பிரித்தானியா, இத்தாலி, போலந்து, ஹங்கேரி போன்ற நாடுகளும் வெப்ப அலை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
அல் ஜசீரா




