அவுஸ்திரேலியாவில் குடிபெயரும் பறவைகள் மத்தியில் அவியன் இன்புளுவென்சா (எச் 5) என்கிற பறவைக் காய்ச்சல் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் தெற்குக் கடற்கரையில் குடிபெயரும் பறவை ஒன்று இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளது நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஃப்ளூரியூ தீபகற்பத்தில் உள்ள நைட்ஸ் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட மற்றொரு பறவையிலும் இப்பறவைக் காய்ச்சல் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு அவுஸ்திரேலியாவின் பிரதமர் பீட்டர் மாலினௌஸ்காஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில் இம்மாத நடுப்பகுதியில் நோய் வாய்ப்பட்ட இரண்டு பறவைகள் உள்ளூர் வனவிலங்கு மீட்புக் குழுவின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டன. நாங்கள் விரைவாகச் செயல்பட்டு, அப்பறவைகளுக்கு எச் 5 வைரஸ் தொற்று உள்ளதா எனச் சோதனை செய்ய ஏற்பாடு செய்தோம். அதன் முடிவுகள் நேற்று எங்களுக்கு கிடைத்தன. அவற்றில் ஒன்றுக்கு பாதிப்பு இல்லை. மற்றொன்றுக்கு பாதிப்பு உள்ளது என்பது உறுதியாகியுள்ளது.
தேவைப்படும் பட்சத்தில், பறவைகளைக் கையாண்ட தன்னார்வலர்களுக்கு வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்படும். நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த பறவைகளைக் காண்பவர்கள் அவற்றை பிடிப்பதை தவிர்ப்பதோடு அவை தொடர்பில் எங்களுக்கு அறியத்தரவும் என்று அவர் வலியுறுத்தினார்
ஏ.பி.சி நியூஸ்




