சவூதியை இலகுவாக வீழ்த்திய ஸ்பெயின் நொக் அவுட் சுற்று வாய்ப்பை நெருங்கியது

2 Min Read

சவூதி அரேபியாவுக்கு எதிராக 4–0 என்ற கோல் கணக்கில் இலகு வெற்றியீட்டிய ஐரோப்பிய சம்பியன் ஸ்பெயின் அணி பிஃபா உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது. எனினும் ஐரோப்பாவின் மற்றொரு வலுவான நாடான பெல்ஜியம் ஈரானுக்கு எதிரான போட்டியை கோலின்றி சமநிலை செய்த நிலையில் அடுத்த சுற்று வாய்ப்பு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

ஆபிரிக்காவின் குட்டி தீவு நாடான கேப் வர்டேவுக்கு எதிரான போட்டியை சமநிலை செய்த நிலையிலேயே ஸ்பெயின் அணி தனது இரண்டாவது எச் குழுவுக்கான போட்டியில் சவூதி அரேபியாவை எதிர்கொண்டது.   அட்லான்டாவில் நடந்த இந்தப் போட்டியின் 10 ஆவது நிமிடத்திலேயே 18 வயதான லமினே பமால் ஸ்பெயின் அணியின் கோல் எண்ணிக்கையை ஆரம்பித்தார். 1958 இல் பிரேசிலின் பீலேவுக்கு பின்னர் உலகக் கிண்ண போட்டி ஒன்றில் முதல் கோலை பெற்ற 18 அல்லது அதற்கு குறைந்த வயது வீரராக அவர் பதிவானார்.

இதனைத் தொடர்ந்து ஸ்பெயின் வீரர்கள் மேலும் இரு கோல்களை புகுத்தியதோடு சவூதி வீரர் ஹசன் அல் தம்பக்தி பெற்ற ஓன் கோல் மூலம் 4–0 என ஸ்பெயின் அணியால் வெல்ல முடிந்தது. இதன்மூலம் அந்த அணி எச் குழுவில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருப்பதோடு 32 அணிகள் சுற்றுக்கு முன்னேறுவதையும் நெருங்கியுள்ளது.  இந்நிலையில் ஜி குழுவில் அணிகளுக்கு இடையே போட்டி அதிகரித்துள்ளது. வான்கூவரில் இலங்கை நேரப்படி நேற்றுக் காலை நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 3–1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டிய எகிப்து அணி அந்தப் குழுவில் 4 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

நியூசிலாந்து முதல் பாதியில் 1–0 என முன்னிலை பெற்றபோதும் இரண்டாவது பாதியில் எகிப்து தொடர்ந்து மூன்று கோல்களை புகுத்தியது. நட்சத்திர வீரர் மொஹமட் சலாஹ்வும் 67 ஆவது நிமிடத்தில் கோல் பெற்றார்.  ஜி குழுவுக்காக லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற மற்றப் போட்டியில் 2018 உலகக் கிண்ண அரையிறுதியில் ஆடிய பெல்ஜியம் அணி ஈரானுக்கு எதிராக கோலின்றி சமநிலை செய்தது. பெல்ஜியம் தனது இரண்டு குழுநிலை போட்டிகளையும் சமநிலை செய்திருப்பதால் தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் ஆரம்ப சுற்றுடன் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை கேப் வர்டே அணி இலங்கை நேற்று நடந்த உருகுவாய்க்கு எதிரான போட்டியையும் 2–2 என்ற கோல் கணக்கில் சமன் செய்துள்ளது.

இதன்மூலம் அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பையும் தொடர்ந்து தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *