ஆங்கில நாளிதழில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தொடர்பாக வெளியான தவறான செய்தியை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
“Hold SLC Elections or Get Blacklisted, ICC Informs President AKD” என்ற தலைப்பில் டெய்லி மிரர் நாளிதழின் முதல் பக்கத்தில், வெளியாகியுள்ள உண்மைக்குப் புறம்பான மற்றும் தவறாக வழிகாட்டும் செய்தியை அரசாங்கம் வன்மையாக நிராகரித்துள்ளது.
இந்த அறிக்கைக்கு எவ்வித உண்மைப் பின்னணியும் இல்லை. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைவர் ஜெய் ஷாவுக்குமிடையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பை வேண்டுமென்றே திரிபுபடுத்திக் காட்டுவதாக இந்த செய்தி அமைந்துள்ளதையும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் கிரிக்கெட் விளையாட்டின் முன்னேற்றம், கீழ்மட்டத்திலும் மற்றும் இளைஞர்களுக்கான கிரிக்கெட் வேலைத்திட்டங்கள், மேலும், இளம் விளையாட்டு வீரர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியன குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி மற்றும் ICC தலைவர் ஆகிய இருவரும் தமது X தளத்தின் ஊடாக உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். எவ்வித இறுதி அறிவித்தலோ, கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் அச்சுறுத்தலோ அல்லது தேர்தல் தொடர்பான விடயங்களோ இச்சந்திப்பில், கலந்துரையாடப்படவில்லை என்பதுடன், அவ்வாறான எந்தவொரு இறுதி அறிவித்தலும் விடுக்கப்படவில்லை.ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ICC தலைவர் ஆகிய இருவரினதும் உத்தியோகபூர்வ அறிக்கைகளை வாசகர்கள் நேரடியாகப் பார்ப்பதற்கான வாய்ப்பு இருக்கும்போது, இவ்வாறான புனையப்பட்ட செய்தியை வெளியிடுவது சம்பந்தப்பட்ட நாளிதழின் நம்பகத்தன்மையை சீர்குலைக்க வழிவகுக்கும்.




