அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், எலோன் மஸ்க் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற தலைவர்களை இலக்கு வைத்து, வெள்ளை மாளிகையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ட்ரோன் மற்றும் ஸ்னைப்பர் துப்பாக்கிச் சூட்டுச் சதித்திட்டத்தை அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான FBI வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வெள்ளை மாளிகையில் (White House) நடைபெற்ற UFC சண்டைக் கலைநிகழ்வை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்ததாக அமெரிக்க நீதித்துறை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் 4 மாநிலங்களை உள்ளடக்கிய வகையில் எப்.பி.ஐ (FBI) நடத்திய அதிரடி விசேட ஆப்ரேஷன் மூலம், கொலைச் சதித்திட்டத்தில் ஈடுபட்ட 5 சந்தேகநபர்கள் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவத்தில் 19 வயதான டைசன் சி. ப்ராப்பர், 24 வயதான பிரையன் ஓமர் ரோவா, 32 வயதான மைக்கேல் ஆலன் தாமஸ், 32 வயதான டேனியல் கே. எஸ்கிரிட்ஜ் மற்றும் 31 வயதான ஆபிரகாம் ஹெர்மோசிலோ அல்வாரெஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
புலனாய்வு விசாரணைகளின்படி, கைது செய்யப்பட்ட நபர்கள் தீவிர மதவாத மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான தீவிரவாத சித்தாந்தங்களைக் கொண்டவர்களாவர். வெள்ளை மாளிகையில் நடந்த UFC நிகழ்வில் இவர்கள் நேரடியாகப் பங்கேற்காத போதிலும், அங்கிருந்த மிக முக்கியஸ்தர்களை ஸ்னைப்பர் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன்கள் மூலம் தூரத்திலிருந்து தாக்கத் திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஒஹாயோ (Ohio) மாநிலத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரின் கைத்தொலைபேசியில் இருந்த ‘மறைக்குறியீடு செய்யப்பட்ட செய்திகளை’ (Encrypted Messages) எப்.பி.ஐ அதிகாரிகள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்திய போதே இந்த ஒட்டுமொத்தப் படுபயங்கர சதித்திட்டமும் அம்பலமாகியுள்ளது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள எப்.பி.ஐ (FBI) காஷ் பட்டேல், “திட்டமிடப்பட்டிருந்த இந்த கொடூரமான தாக்குதல் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, அதனை முளையிலேயே கிள்ளி எறிந்து முழுமையாக எம்மால் தடுக்க முடிந்தது” என்று தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள 5 பேருக்கும் எதிராக தற்போது அமெரிக்க நீதிமன்றத்தில் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.



