பிஃபா உலகக் கிண்ண போட்டியில் பிரேசில் அணி மொரோக்கோவுக்கு எதிரான தனது முதல் போட்டியை சமன் செய்ததோடு வலுவான துருக்கி அணிக்கு எதிராக அவுஸ்திரேலியா அதிர்ச்சி வெற்றியீட்டியது.
சி குழுவுக்காக இலங்கை நேரப்படி நேற்று (14) அதிகாலை நியூயோர்க்கில் நடைபெற்ற போட்டியில்; இஸ்மெயில் செய்பாரி 21 ஆவது நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் பிரேஸிலுக்கு எதிராக மொரோக்கோவால் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற முடிந்தது. இதன்மூலம் ஆபிரிக்க சம்பியனான மொரோக்கோ உலகக் கிண்ணத்தில் தென் அமெரிக்க அணி ஒன்றுக்கு எதிராக முதல் கோலை பெற்றது.
எவ்வாறாயினும் 10 நிமிடங்களின் பின் வின்சியஸ் ஜூனியர் மூலம் மொரோக்கே பதில் கோலை திருப்பியது. தொடர்ந்து இரு அணிகளும் கோல் பெறத் தவறிய நிலையில் போட்டி 1–1 என சமநிலை பெற்றது.
1934ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் ஸ்பெயினுக்கு எதிராக முதல் போட்டியில் தோற்ற பின்னர் முதல் போட்டியைத் தோற்காமல் பிரேசில் காப்பாற்றி வந்துள்ளது. அதாவது 21 உலகக் கிண்ண தொடர்களில் தனது முதல் போட்டிகளில் 17 வெற்றிகளுடன் தோல்வியடையாத சாதனையை அந்த அணி இன்று வரை தக்கவைத்துள்ளது.
எனினும் முதலில் மொராக்கோ வீரர் எல் அய்னோயி பிரேசில் கோல் வலையின் வலது மூலையை நோக்கி அடித்த அற்புதமான உதையை அலிசன் பாய்ந்து தட்டி விட்டார். ஆனால் அங்கு இன்னொரு மொராக்கோ வீரர் அமய்மவ்னி பந்தை கோலுக்குள் திருப்பி விட்ட முயற்சியையும் அலிசன் தடுத்தாட்கொண்டார். இதனால் பிரேசில் தப்பிப் பிழைத்தது.
பிரேசில் அணி அடுத்து எதிர்வரும் சனிக்கிழமை (20) ஹெய்ட்டியை எதிர்கொள்ளவிருப்பதோடு மொரோக்கோ அணி அன்றைய தினத்தில் ஸ்கொட்லாந்தை சந்திக்கவுள்ளது.
எனினும் டி குழுவுக்காக வான்கூவரில் நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலிய அணி பெற்ற இரட்டை கோல்கள் மூலம் 24 ஆண்டுகளின் பின்னர் உலகக் கிண்ணத்திற்கு திரும்பிய துருக்கியை வீழ்த்த முடிந்தது.
2002 உலகக் கிண்ணத்தில் மூன்றாம் இடத்தைப் பிடித்த பின்னர் முதல் முறை உலகக் கிண்ணத்தில் களமிறங்கிய துருக்கிக்கு எதிராக 27 ஆவது நிமிடத்தில் நெஸ்டோரி இரன்குண்டா முதல் கோலை புகுத்தியதன் மூலம் ஆஸி. அணி முதல் பாதியில் 1–0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் மற்றொரு கோலை புகுத்தியதன் மூலம் அந்த அணியால் பெரிய அளவில் சவால் இன்றி போட்டியில் வெல்ல முடிந்தது.
பொஸ்டனில் சி குழுவுக்காக நேற்று அதிகாலையில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஹெய்ட்டி அணியை ஸ்கொட்லாந்தினால் 1–0 என வீழ்த்த முடிந்தது. போட்டியின் 28 ஆவது நிமிடத்தில் ஜோன் மக்கின் போட்ட கோல் அந்த அணியின் வெற்றி கோலாக அமைந்தது. இதன்மூலம் ஸ்கொட்லாந்து அணி 1990 இல் சுவீடன் அணியை 2–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பின்னர் உலகக் கிண்ணத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
நாளைய போட்டிகள்
மு.ப. 12.30 – பெல்ஜியம் எதிர்
எகிப்து (ஜி குழு), சியாட்டல்
மு.ப. 3.30 – சவூதி அரேபியா
எதிர் உருகுவாய் (எச் குழு), மியாமி
மு.ப. 6.30 – ஈரான் எதிர் நியூசிலாந்து
(ஜி குழு), லொஸ் ஏஞ்சல்ஸ்



