காசாவின் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ள ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்களை ஒருபோதும் அடையாளம் காண முடியாமல் போகும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
காசாவில் மீட்புப் பணிகள் மந்த நிலையில் காணப்படுவதாகவும், பலியானவர்களின் உடல்கள் இன்னும் மீட்கப்படாததாலும் இந்த அபாயம் அதிகரித்து வருவதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
ஜெருசலமிலுள்ள உள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பேச்சாளர் பாட் கிரிஃபித்ஸ் மேலும் கூறுகையில், காசாவில் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ள உடல்களை அடையாளம் காண்பது விரைவில் கடினமாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
மனித எச்சங்களை மீட்க எவ்வளவு காலம் ஆகிறதோ, அவ்வளவு கடினம் அவற்றை அடையாளம் காண்பதாக இருக்கும். இறந்தவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் எவ்வளவு காலம் இருக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் சிதைவின் முற்றிய நிலைகளில் ஏன் எலும்புக்கூடுகளாகக் கூட இறுதியில் மீட்கப்பட இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
தடயவியல் நிபுணர்கள், அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தப் பயன்படுத்தக்கூடிய ஆதாரங்களை அணுகும் வாய்ப்பும் இழக்கப்படலாம் என்றுள்ளார்.
காசா சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த இடிபாடுகளுக்கு அடியில் குறைந்தது 10,000 பேர் புதையுண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த எண்ணிக்கை 14,000 வரை இருக்கலாம் என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர்.



