3 ஆண்டுகள் கோமா நிலையில் இருந்த இளவரசி பஜ்ரகிதியாபா காலமானார்

1 Min Read

தாய்லாந்து மன்னர் வஜிராலோங்கோர்னின் மூத்த மகளும், அந்நாட்டு அரச குடும்பத்தின் மிக முக்கியமான ஆளுமையுமான இளவரசி பஜ்ரகிதியாபா தனது 47ஆவது வயதில் காலமானார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தாய்லாந்து அரச மாளிகை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது நாய்களுக்குப் பயிற்சியளித்துக் கொண்டிருந்த போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரது இதயத்தில் ஏற்பட்ட ‘மைகோபிளாஸ்மா’ தொற்றினால் கடும் இதயத் துடிப்பு சீர்குலைவு ஏற்பட்டதே இதற்குக் காரணம் என வைத்தியர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

சுமார் மூன்றரை ஆண்டுகள் பேங்கொக்கில் உள்ள சுலாலோங்கோர்ன் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று (11)அந்நாட்டு நேரப்படி இரவு 07.48 மணிக்கு காலமானதாக இன்று (12) காலை வெளியிடப்பட்ட அரண்மனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து அரச குடும்பத்திலேயே மிகவும் படித்த, திறமையான ஒருவராக இளவரசி பஜ்ரகிதியாபா மதிக்கப்பட்டார்.

சட்டத்துறையில் பயிற்சி பெற்ற அவர், அமெரிக்காவின் புகழ்பெற்ற கோர்னெல் பல்கலைக்கழகத்தில் இரண்டு முதுகலை பட்டங்களைப் பெற்றவர்.

நியூயோர்க்கில் உள்ள ஐநாவுக்கான தாய்லாந்து தூதரகத்தில் பணியாற்றிய அவர், பின்னர் தாய்லாந்தின் சட்டமா அதிபர் அலுவலகத்தில் சிரேஷ்ட அதிகாரியாகப் பணியாற்றினார்.

2012 முதல் 2014 வரை ஆஸ்திரியாவுக்கான தாய்லாந்து தூதுவராகப் பணியாற்றினார். அத்துடன், தென்கிழக்கு ஆசியாவிற்கான ஐநா போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகத்தின் (UNODC) சட்டத்தின் ஆட்சிக்கான நல்லெண்ண தூதுவராகவும் செயல்பட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *