ஜப்பானிடமிருந்து ரூ. 200 மில்லியன் பெறுமதியான 6 குளிரூட்டப்பட்ட வாகனங்கள் நன்கொடை

2 Min Read

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் மீன் விநியோக நடவடிக்கைகளை நவீனமயப்படுத்துவதற்கும், அறுவடைக்குப் பிந்தைய நஷ்டத்தைக் குறைப்பதற்கும் ஜப்பானிய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட ரூ. 200 மில்லியன் பெறுமதியான 6 நவீன குளிரூட்டப்பட்ட வாகனங்கள் உத்தியோகபூர்வமாக கடற்றொழில் அமைச்சிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (10) கொழும்பிலுள்ள மீன்பிடிக் கூட்டுத்தாபனத் தலைமையகத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இசோமாடா அக்கியோ (H.E. ISOMATA Akio), இந்த வாகனங்களை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,

‘இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் 1945 ஆம் ஆண்டு முதல் அசைக்க முடியாத வரலாற்று ரீதியான நட்புறவு நிலவி வருவதாகக் குறிப்பிட்டார். “இந்தக் குளிரூட்டப்பட்ட வாகனங்கள் மூலம் மீன் அறுவடையின் தரத்தைப் பேணி, நுகர்வோருக்குப் புதிய மீன்களை வழங்க முடிவதுடன், மீன்கள் வீணாவதையும் குறைக்க முடியும். எமது நாட்டின் கடற்றொழில் துறையின் வளர்ச்சிக்காக ஜப்பான் தொடர்ச்சியாக வழங்கும் உதவிகளுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் கூறினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே,

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மீன்பிடிக் கூட்டுத்தாபனம் பாரிய மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். “கடந்த காலங்களில் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் இருந்த ஒரு நோயாளி போன்ற நிலையிலேயே இருந்தது. ஆனால் தற்போது நாம் அந்த நிலையை மாற்றி கூட்டுத்தாபனத்திற்குப் புத்துயிர் அளித்துள்ளோம். ஊழியர்களின் ரூ. 700 மில்லியனுக்கும் அதிகமான EPF/ETF நிலுவைப் பணத்தைச் செலுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜப்பானிடமிருந்து கிடைத்துள்ள இந்த பங்களிப்பு கூட்டுத்தாபனத்தின் புதிய பயணத்திற்குப் பெரும் உந்துசக்தியாக அமையும்” என அவர் வலியுறுத்தினார்.

ஜப்பானிய தூதுவர் இசோமாடா அக்கியோ கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையின் மொத்த மீன் அறுவடையில் சுமார் 40% வீணாவதாகச் சுட்டிக்காட்டினார். இந்த அறுவடைக்குப் பிந்தைய நஷ்டத்தைக் குறைத்து, தேசிய உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என அவர் தெரிவித்தார். இச்செயற்திட்டத்தின் கீழ் ஏற்கனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 03 ஐஸ் உற்பத்தி இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளதையும் அவர் நினைவூட்டினார்.

இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. கே. கோலித கமல் ஜினதாச, இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் முகமது நவ்ரஸ் நாசர், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான், கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் சுசாந்த கஹவத்த, இலங்கை மீன்பிடித் துறைமுகங்கள் சட்டரீதியான கூட்டுத்தாபனத்தின் தலைவர் பி.ஏ.பி. கபில பமுணுஆரச்சி, தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் (NAQDA) தலைவர் கித்சிறி தர்மப்பிரிய மற்றும் சீநோர் (Cey-Nor) நிறுவனத்தின் தலைவர் வசந்த மான்னப்பெரும உள்ளிட்ட அமைச்சின் மற்றும் ஜப்பானிய தூதரகத்தின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *