கடற்றொழில் துறைக்கு ஒதுக்கப்பட்ட பாரிய நிதி

2 Min Read

மாத்தறை மாவட்ட மீனவ சமூகம் எதிர்கொள்ளும் தொழில்சார் மற்றும் உட்கட்டமைப்பு பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கும் நோக்கில் இரண்டாவது மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர்  ரத்ன கமகே  தலைமையில் நேற்று (08) மாத்தறை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இங்கு பிரதானமாக கந்தறை மீன்பிடித் துறைமுகத்தின் நிர்மாணப் பணிகளில் நிலவும் தாமதங்கள் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள சமூக, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

கந்தறை, நில்வெல்ல, தெவிநுவர மற்றும் கோட்டேகொட ஆகிய மீன்பிடித் துறைமுகங்களில் பல ஆண்டுகளாகக் குவிந்துள்ள பழுதடைந்த படகுகள் பெரும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதால், அவற்றை உடனடியாக அகற்றுவதற்குத் தேவையான சட்ட மற்றும் நிர்வாக ரீதியான தலையீடுகளை மேற்கொள்ளுமாறு பிரதி அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் தெவிநுவர துறைமுகத்திற்கு படகுத் திருத்தும் தளம் ஒன்றை வழங்குவது மற்றும் கந்தறை துறைமுகப் பகுதியில் பொலிஸ் சோதனைச் சாவடி ஒன்றை நிறுவுவது குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

ஆழ்கடலில் மீன்பிடிக் கலன்கள் எதிர்கொள்ளும் தொழில்நுட்பக் கோளாறுகள், விபத்துக்கள் மற்றும் மீனவர்களுக்கு ஏற்படும் நோய் நிலைமைகளின் போது அமைச்சின் ஊடாக நேரடித் தலையீடுகளை மேற்கொள்ளக்கூடிய முறையான பொறிமுறையொன்றை வகுப்பதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார். அத்துடன் மீன்பிடித் துறைமுக தொடர்பாடல் கட்டமைப்புகளைச் சீரமைத்தல், மீனவர் காப்புறுதி மற்றும் ஓய்வூதியப் பிரச்சினைகளைத் தீர்த்தல் மற்றும் நன்னீர் மற்றும் அலங்கார மீன்பிடித்துறையை மேம்படுத்த தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை (NAQDA) முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை மேலும் விரிவுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

அதிகாரிகளிடம் உரையாற்றிய பிரதி அமைச்சர் குறிப்பிட்டதாவது:
“கடற்றொழில் துறையை மேம்படுத்துவதற்காகத் தற்போதைய அரசாங்கம் இவ்வருடத்தில் பாரிய நிதியை ஒதுக்கியுள்ளது. அந்த நிதியை எவ்வித காலதாமதமுமின்றி, அர்த்தமுள்ள வகையில் மீனவர்களின் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும். இதில் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு மிக முக்கியமானது. எந்தவொரு நிர்வாகத் தடையையும் காரணம் காட்டி மீனவ மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேவைகளைத் தாமதப்படுத்த இடமளிக்க முடியாது.”

இந்நிகழ்வில் எரிசக்தி பிரதி அமைச்சர் அர்க்கம் இல்யாஸ், நாடாளுமன்ற உறுப்பினர் அஜந்த கம்மத்தகே, மாத்தறை மாவட்டச் செயலாளர், திக்வெல்ல மற்றும் தெவிநுவர பிரதேச சபைகளின் தலைவர்கள் உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள், இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனம், நாரா (NARA), சீநோர் (Cey-Nor) மற்றும் NAQDA ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *