அரச ஊழியர்களுக்கான புகையிரத பருவகாலச் சீட்டு டிஜிட்டல் மயம்

1 Min Read

அரசாங்கத்தின் தேசிய டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்திற்கு அமைவாக, அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் புகையிரதப் பருவகாலச் சீட்டுகளை ஒன்லைன் ஊடாக வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை புகையிரதத் திணைக்களம் ஆகியவற்றின் வழிகாட்டலில், “கொழும்பு புறநகர் புகையிரதத் திட்டம்” ஊடாக இந்த நவீன பொறிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், அரச அதிகாரிகள் தமக்குரிய சலுகை விலை பருவகாலச் சீட்டுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர், அவர்கள் பணிபுரியும் அரச நிறுவனங்கள் இந்த டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இதற்கான உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு பத்தரமுல்லையில் உள்ள ‘வாட்டர்ஸ் எட்ஜ்’ (Waters Edge) ஹோட்டலில், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன தலைமையில் நடைபெற்றது. இதில் 35 அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பருவகாலச் சீட்டு வசதியைப் பெற விரும்பும் அரச ஊழியர்கள், தங்களது நிறுவனத்தின் ஊடாக அல்லது ‘Access’ மொபைல் செயலி (Mobile App) மற்றும் www.pravesha.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தள முகவரியூடாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு பதிவு செய்யும் அதிகாரிகள், 2026 ஜூலை 15 ஆம் திகதிக்குரிய தங்களது பருவகாலச் சீட்டுகளுக்கு அந்தந்த நிறுவனங்கள் ஊடாக விண்ணப்பிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஜூலை 19 ஆம் திகதி முதல் அனைத்துப் பருவகாலச் சீட்டுகளும் இணையத்தளத்தில் முழுமையாகக் கிடைக்கப்பெறும்.

இந்த டிஜிட்டல் மாற்றத்தின் மூலம் புகையிரதத் திணைக்களத்தின் சேவைத் திறன் அதிகரிப்பதுடன், அரச ஊழியர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் தமக்கான பயணச் சீட்டுகளை விரைவாகவும் இலகுவாகவும் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *