மத்திய லாவோஸ் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த குகைக்குள் கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் சிக்கியிருந்த உள்ளூர் நபர்கள் 5 பேர்உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்களைத் தவிர, எஞ்சிய இருவர் இன்னும் மாயமாகியுள்ளதால் அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நீடித்து வருகிறது.
தலைநகர் வியன்டியானில் இருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள சைசோம்பூன் மாகாணத்தின் அடர்ந்த, கரடுமுரடான மலைப்பகுதியில் இந்தக் குகை அமைந்துள்ளது.
கடந்த 19ஆம் திகதி குகைக்குள் சென்ற 7 பேர், திடீரென பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வெளியேறும் வழி அடைக்கப்பட்டு, உள்ளேயே சிக்கிக் கொண்டனர். பாதுகாப்புக் காரணங்களுக்காக குகைக்குள் செல்ல வேண்டாம் என உள்ளூர் நிர்வாகம் எச்சரித்திருந்த நிலையிலும், அப்பகுதி மக்கள் அங்கு தங்கம் தேடுவதற்காக சென்றிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
லாவோஸ்- தாய்லாந்து கூட்டு மீட்புக் குழுவினர், இந்த மீட்ப்பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். குகைக்குள் சென்ற வீரர்கள், வெள்ளநீருக்கு நடுவே இருந்த ஒரு பாறையின் மீது விளக்குகளுடன் அமர்ந்திருந்த கிராம மக்களைக் கண்டுபிடித்த நெகிழ்ச்சியான விடியோ வெளியாகியுள்ளது.
2018இல், தாய்லாந்து குகைக்குள் சிக்கிய 12 பள்ளிச்சிறுவர்களையும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளரையும் மீட்ட உலகப் புகழ்பெற்ற மீட்பு நடவடிக்கையில் பங்கேற்ற பல்வேறு நாட்டு வீரா்களும் தற்போதைய மீட்புப் பணியில் இணைந்து களம் இறங்கினர்.



