மட்டு. விடுதி தீ விபத்தில் பலியான சிறுவர்கள்: தந்தை கைது

2 Min Read
xr:d:DAFPA4-cxsE:254,j:45122182118,t:23011304

மட்டக்களப்பில் விடுதியில் தீ பற்றி உயிரிழந்த இரு குழந்தைகளின் தாய்க்கு புற்றுநோய் என பொய் கூறி தந்தையார் போலி அடையாள அட்டையை பயன்படுத்தி பிள்ளைகளை வைத்து பிச்சை எடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளதையடுத்து, உயிரிழந்த பிள்ளைகளின் தந்தையான அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த குவண்டா ஹண்டி சுபுன் எரண்ட சில்வாவை நேற்று (28) இரவு கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரியவருவதாவது,

மட்டு. திருகோணமலை வீதியில் உள்ள விடுதியின் அறையில் தங்கியிருந்த இரு குழந்தைகள் நேற்று புதன்கிழமை (27) மாலையில் கட்டில் மெத்தை தீப்பற்றி எரிந்ததில் இரு குழந்தைகள் மூச்சு திணறி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் குறித்த தந்தையாரின் அடையாள அட்டையை விசேட புலனாய்வு பிரிவினர் பரிசோதனை செய்த போது குறித்த அடையாள அட்டைக்கு சொந்தமானவர் பதுளையில் இருப்பதாகவும், அவருடைய பழைய அடையாள அட்டை 2023ஆம் ஆண்டு தொலைந்து போயுள்ள நிலையில் அவர் சட்டரீதியாக புதிய அடையாள அட்டை பெற்று தற்போது கடவத்தையில் வசித்து வருகின்றார். எனவும் தெரிய வந்துள்ளது.

குறித்த பதுளையைச் சேர்ந்தவரின் தொலைந்த அடையாள அட்டையை எடுத்து கொண்ட உயிரிழந்த குழந்தைகளின் தந்தையான 31 வயதுடைய மன கொடவத்த, பரடுவ, அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த குவண்டா ஹண்டி சுபுன் எரண்ட சில்வா அவரது உண்மையான பெயர் முகவரியை மறைத்து பதுளையில் உள்ளவரின் அடையாள அட்டையை தன்னுடையது என காட்டி வந்துள்ளார் என விசேட புலனாய்வு பிரிவினர் விசாரணை மூலம் கண்டறிந்து பொலிஸாருக்கு தெரிவித்தனர்.

இதையடுத்து மனைவி புற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொய்களை கூறி இரு குழந்தைகளையும் ஆலயங்கள், பள்ளிவாசல்கள், பொது இடங்கள் என மாவட்டம் மாவட்டமாக கொண்டு சென்று பிச்சை எடுத்து வந்துள்ள அவர் மட்டக்களப்புக்கு கடந்த 20ஆம் திகதி குறித்த விடுதியில் மனைவி காத்தான்குடி வைத்தியசாலையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரை பார்க்க வந்துள்ளதாக பொய் கூறி அறையை வாடகைக்கு எடுத்து கொண்டு இரு குழந்தைகளுடன் தங்கியிருந்து கொண்டார்.

அதன் பின்னர் மனைவியை காத்தான்குடி வைத்தியசாலைக்கு போய் பார்த்து விட்டு வருவதாக குழந்தைகளுடன் வெளியேறி அந்த பகுதியில் உள்ள பள்ளிவாசல்களுக்கு சென்று மனைவிக்கு புற்றுநோய் என பிச்சை எடுத்து வந்துள்ளதாகவும் சம்பவ தினம் பிற்பகல் 2.00 மணிக்கு குழந்தைகளை அறையில் வைத்து பூட்டிவிட்டு மாடியின் கீழ் தரையில் உள்ள மது விற்பனை நிலையத்தில் சென்று மது அருந்திவிட்டு சுமார் 2 மணித்தியாலத்தின் பின்னர் அறைக்கு சென்ற போது அங்கு தீ பற்றி இரு குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாகவும் அவரது மனைவி மாத்தறையில் அவரது ஊரில் இருப்பதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது

இவ்வாறு பல பொய்களை கூறி குழந்தைகளை வைத்து பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ள குறித்த நபரை நேற்று (28) இரவு கைது செய்ததுடன் குழந்தைகளின் தாயார் வரவழைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மட்டு. தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *