பங்களாதேசத்தின் பொருளாதார ஸ்தீரத்தன்மையை சீர்குலைத்துவரும் மூன்று முக்கிய காரணிகளை ஆசிய அபிவிருத்தி வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலாவைத் தலைமையகமாகக் கொண்ட இந்த வங்கி நிதி நிர்வாகம், பொதுச் செலவின முகாமை மற்றும் கடன் நிர்வாகத்தில் நிலவும் தொடர்ச்சியான பலவீனங்கள் ஆகியனவே பங்களாதேசத்தின் பொருளாதார ஸ்திரத்தன்மையை தொடர்ந்து சீர்குலைத்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் பொதுக் கடன் மீதான மேற்பார்வையை மேம்படுத்துவதற்காக பிரத்தியேக கடன் அலுவலகத்தை நிறுவவும் அந்த வங்கி பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பில் அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், 2026 நவம்பரில் குறைவிருத்தி நாடு என்ற நிலையில் இருந்து பங்களாதேசம் வெளியேறுகிறது. அதனால் சலுகை நிதியுதவி மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு நடவடிக்கைகளுக்கான அணுகலை அது படிப்படியாகக் குறைக்கும். இதன் விளைவாக வலுவான உள்நாட்டு வருவாய் திரட்டலும் மேம்பட்ட நிதி நிர்வாகத்தின் தேவையும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் முகாமைத்துவ அமைப்புகளில் உள்ள பலவீனங்களை சுட்டிக்காட்டியுள்ள இந்த அறிக்கை, பொறுப்புகள் மற்றும் அரசாங்க உத்தரவாதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் கூடுதல் நிதி அபாயங்களை எதிர்கொள்ளும் என்றும் எச்சரித்துள்ளது.
த டெய்லி ஸ்டார்



