வடகிழக்கு கொங்கோவில் இறுதி அஞ்சலி நிகழ்வில் 50 இற்கும் மேற்பட்டோர் பங்குபற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உதவிப் பணியாளர்களால் நடத்தப்படும் சில அடக்க நிகழ்வுகளுக்கு ஆயுதம் ஏந்திய இராணுவ வீரர்களும் பொலிஸாரும் பாதுகாப்பு அளித்து வருவதாகவும் அவர்கள் கூறினர். கிழக்குப் பகுதியிலுள்ள எபோலா சிகிச்சை மையங்கள் மீது தீவைப்பு சம்பவங்கள் இடம்பெற்றமையும் இரண்டு நகரங்களில் உள்ள இரு சிகிச்சை மையங்கள் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளானமையும் இதற்கு காரணமாகும். அதனைத் தொடர்ந்து இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொங்கோ தகவல் தொடர்பு அமைச்சின் எக்ஸ் தள பதிவின்படி, 904 சந்தேகிக்கப்படும் எபோலா நோயாளர்களும் 119 இறப்புகளும் இற்றைவரை பதிவாகியுள்ளன. இந்நோய்ப் பரவலின் மையமாக விளங்கும் இடுரி மாகாணத்தில், சுமார் 700 இற்கும் மேற்பட்ட சந்தேகிக்கப்படும் எபோலா நோயாளர்களும், 170 இற்கும் மேற்பட்ட இறப்புகளும் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் கூறிய நிலையில் அமைச்சு மேற்கண்டவாறு பதிவிட்டிருக்கிறது.
கொங்கோவுக்கு மிக அதிக அபாயத்தை இந்நோய் பரவல் ஏற்படுத்தியுள்ள போதிலும் அது உலகளவில் பரவும் அபாயம் குறைவாகவே காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்திருக்கிறது.
த கார்டியன்



