நியூசிலாந்து மகளிர் ஏ அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் 51 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை மகளிர் ஏ அணி மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரை 2–0 என கைப்பற்றியது.
ரங்கிரி தம்புள்ளை மைதானத்தில் நேற்று முன்தினம் (23) நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணிக்கு ஆரம்ப வீராங்கனை விஷ்மி குணரத்ன 49 பந்துகளில் 4 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களை விளாசினார்.
அவர் ஆரம்ப விக்கெட்டுக்கு சஞ்சனா காவிந்தியுடன் (27) இணைந்து 44 ஓட்டங்களையும் இரண்டாவது விக்கெட்டுக்கு விமொக்ஷா பாலசூரியவுடன் (33) இணைந்து 52 ஓட்டங்களையும் பகிர்ந்துகொண்டார். இலங்கை மகளிர் ஏ 20 ஓவர்களுக்கும் 5 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களை பெற்றது.
இந்நிலையில் பதிலெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் ஏ அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. குறிப்பாக 49 ஓட்டங்களைப் பெறுவதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து 19.5 ஓவர்களில் 96 ஓட்டங்களுக்கு சுருண்டது.
பின் வரிசையில் வந்த எமா பேக் அதிகபட்சம் 20 பந்துகளில் 28 ஓட்டங்களை பெற்றார். சிறப்பாக பந்து வீசிய 20 வயது சுழல் வீராங்கனை தெவ்மி விஹங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு சமுதி பிரபோதா 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இதே ரங்கிரி தம்புள்ளை மைதானத்தில் இன்று (25) நடைபெறவுள்ளது.



