இலங்கை–பூட்டான் அணிகளின் கால்பந்து போட்டி ஜூன் 8இல்

1 Min Read

இலங்கை மற்றும் பூட்டான் அணிகளுக்கு இடையே சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி ஒன்று எதிர்வரும் ஜூன் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை பொதுவான இடமாக தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் நடத்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

இந்தப் போட்டி இலங்கை அணி இந்த ஆண்டில் ஆடும் இரண்டாவது சர்வதேச போட்டியாக அமையவுள்ளது. கடந்த மார்ச்சில் நடைபெற்ற 2027 ஆசிய கிண்ண தகுதிகாண் சுற்றி டி குழுவுக்கான இரண்டாவது கட்டப் போட்டியில் இலங்கை அணி சீன தைப்பேவை 3–1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மற்றும் பூட்டான் அணிகளுக்கு இடையே இதுவரை நடைபெற்ற ஏழு போட்டிகளில் இலங்கை அணி ஐந்தில் வென்றதோடு பூட்டான் அணியால் இரண்டு ஆட்டங்களில் வெல்ல முடிந்துள்ளது.

எதிர்வரும் சாஃப் கிண்ண போட்டிக்கு தயாராகும் வகையிலேயே இந்த நட்புறவு ஆட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக இலங்கை கால்பந்து சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை குழாம் எதிர்வரும் ஜூன் 4 அல்லது 5 ஆம் திகதி தாய்லாந்து புறப்பட்டுச் செல்லவுள்ளது. சர்வதேச கால்பந்து சம்மேளன தரவரிசையில் இலங்கை கால்பந்து அணி தற்போது 191 ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் எதிர்வரும் நட்புறவுப் போட்டிகளில் இலங்கையால் வெல்ல முடிந்தால் தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேற முடியும். பிஃபா தரவரிiயில் பூட்டான் இலங்கையை விடவும் முன்னிலை பெற்று 186 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் தெற்காசிய கால்பந்து சம்மேளன (பிஃபா) கால்பந்து தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபரில் பங்களாதேஷில் நடத்த ஏற்பாடாகி இருந்தபோதும் இந்தியா அந்தத் தொடரில் பங்கேற்காததன் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதே காலப்பகுதியில் இந்தியா, சீனா உட்பட நான்கு அணிகள் பங்கேற்கும் அழைப்புத் தொடர் ஒன்றில் ஆடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *