இந்து சமுத்திரத்தில் அமைந்திருக்கும் எழில்மிகு தீவு தான் இலங்கை. நாலாபுறமும் கடலால் சூழப்பட்டுள்ள இத்தீவானது இயற்கை வளங்கள் நிறைந்த உயிர்ப்பல்வகைமை மிக்க பசுமைமிகு தேசமாகும்.
தெற்காசியாவிலேயே சதுப்புநில நீர்வழிகளைக் கொண்ட நகரை தலைநகராகக் கொண்ட நாடாக விளங்கிறது இலங்கை. அதனால் சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதற்கான ரம்சார் அமைப்பு கொழும்பிலுள்ள சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதில் விஷேட கவனம் செலுத்தியுளளது.
அந்த வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவின் எண்ணக்கருவுக்கு அமைய முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீ லங்கா (Clean Sri lanka) திட்டத்தின் ஊடாக கொழும்பில் இயற்கையாகவே அமைந்திருக்கும் நீர்வழிகளை உயிர்ப்பல்வகைமை மிக்க அழகானதும் கவர்ச்சிகரமானதுமான இடமாக மேம்படுத்த எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.
இலங்கை ஒரு வளர்முக நாடாக இருப்பதால் கடந்த இரண்டு மூன்று தசாப்தங்கள் தொடக்கம் திண்மக் கழிவுப்பொருட்கள் நாளுக்கு நாள் வளர்ந்துவரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. இதற்கு பட்டிதொட்டியெல்லாம் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட திண்மக்கழிவுப் பொருட்கள் குவிந்தும் பரவியும் காணப்படுவது நல்ல எடுத்துக்காட்டாகும். அதிலும் கொழும்பிலுள்ள பெரும்பாலான நீர்வழிகள் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுப் பொருட்களால் மூடுண்டுள்ளன.
இக்கழிவுப் பொருட்கள் இலங்கைக்கு ஒரு பொதுப் பிரச்சினையாக வளர்ச்சி பெற்றுள்ளது. இப்பிரச்சினைக்கு நிலைபெறான தீர்வைக் காண்பதில் கிளீன் ஸ்ரீ லங்கா செயலகம் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது. அந்த வகையில் அனைத்து அரசாங்க நிறுவனங்களிலும் ஒரு முறை பயனபடுத்தும் பிளாஸ்ரிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் அரசாங்கம் தடை விதித்திருக்கிறது. இது தொடர்பில் விஷேட சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பொதுநிர்வாக அமைச்சு அதனை அனைத்து அரச நிறுவனத் தலைவர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது. அரச நிறுவனங்களின் திண்மக் கழிவு முகாமைத்துவத்தை முறைப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சின் அதிகாரியொருவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இதேவேளை கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் கழிவுப் பொருட்களை அகற்றவும் மீள்சுழற்சிக்கு உட்படுத்தவும் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களுக்கு நீர்கொழும்பு மீள்சுழற்சி நிறுவனமும் (NRC) தெற்காசிய ஒத்துழைப்பு சுற்றுச்சூழல் திட்டமும் (SACEP), ஆதரவும் ஒத்துழைப்பும் அளித்துவருகின்றன. அத்தோடு மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபை (WPWMA), மத்திய சுற்றாடல் அதிகார சபை (CEA) போன்ற நிறுவனங்களும் கிளீன் ஸ்ரீ லங்காவின் இத்திட்டத்தில் இணைந்து செயற்படுகின்றன. அந்த வகையில் சுற்றுச்சூழலில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் சேருவதைக் கட்டுப்படுத்தி, செயலூக்கமான பொருளாதாரத் திட்டங்களை ஊக்குவிப்பதை நோக்காகக் கொண்ட Catalyzing Actions to Close the Plastic Loop எனும் திட்டத்தினாலும் உலக வங்கியின் நிதி அனுசரணையின் கீழ் தெற்காசிய ஒத்துழைப்பு சுற்றுச்சூழல் திட்டத்தினாலும் (SACEP) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக் அற்ற தெற்காசிய கடல் மற்றும் ஆறுகள் (PLEASE -Plastic Free Rivers and Seas in South Asia) வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள 22 நீர்வழிகளில் கழிவுத் தடுப்பு அணைகள் (Trash Barriers) ஏற்கனவே அமைக்கப்பட்டு, அங்கு சேரும் திண்மக்கழிவுகளை சேகரித்து மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுத்தவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தெற்காசிய ஒத்துழைப்பு சுற்றுச்சூழல் திட்டப் பணிப்பாளர் நாயகம் நொர்வூ வன்சுக்
இவ்வாறான சூழலில் திண்மக் கழிவு முகாமைத்துவப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் விசேட பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. திண்மக்கழிவு முகாமைத்துவம் என்பது கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இந்நாட்டில் வளர்ச்சி பெற்றுவரக்கூடிய ஒன்றாக இருந்து வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தவென பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இருந்தும் கூட திணமக்கழிவுகள் குறைந்ததாக இல்லை. அதனால் திண்மக் கழிவு முகாமைத்துவ பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்களுக்கு துறைசார் பயிற்சிகளை பெற்றுக் கொடுத்து தகுதிமிக்கவர்களாக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் திண்மக்கழிவகற்றல் வரலாற்றில் இது முதன்முறையாக முன்னெடுக்கப்படும் திட்டமாகும். இதன் ஊடாக திண்மக்கழிவற்றல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்களுக்கு கௌரவமும் மரியாதையும் கிடைக்கப்பெறும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ஆகவே திண்மக் கழிவகற்றும் லொறிகள், ட்ரெக்டர்களில் அவற்றை சேகரிக்க வரும் தொழிலாளர்களும் துறைசார் தகுதிபெற்ற தொழிலாளர்கள் என்ற அந்தஸ்தைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது மேல் மாகாணத்தில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களை உள்ளடக்கியுள்ள மேல் மாகாணத்தின் திண்மக்கழிவு முகாமைத்துவ நடவடிக்கைளில் 5,500 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 75 சதவீதமானோரை அடுத்துவரும் 5 வருடங்களில் தொழில் நிபுணத்துவம் பெற்றவர்களாக மேம்படுத்தவும் அவர்களை கழிவு முகாமைத்துவ நடவடிக்கையில் தகுதி வாய்ந்த ஊழியர்களாக உருவாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களில் 100 பேர் முதற்கட்டமாகத் தெரிவு செய்யப்பட்டு துறைசார்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் அனேகர் கொழும்பு, கடுவெல மாநகர சபை உள்ளிட்ட ஆறு உள்ளுராட்சி பிரிவுகளைச் சேர்ந்தவர்களாவர். இவர்களுக்கு தேசிய தொழிற்பயிற்சி அதிகார சபையின் (நைட்டா) ஊடாக தொழில்சார் பரீட்சை நடத்தப்பட்டு கழிவு முகாமைத்துவம் தொடர்பான என்.வி.கியூ.(N.V.Q) தரச் சான்றிதழ் வழங்கப்படவிருக்கிறது. இத்திட்டத்தின் என்.வி.கியூ. 2 தரச் சான்றிதழ் பயிற்சிநெறிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள 50 பேர் ‘நகர திண்மக்கழிவு முகாமைத்துவ உதவியாளர்கள்’ ஆகவும் ஏனைய 50 பேரும் என்.வி.கியூ. 3 தரச் சான்றிதழ் பயிற்சிநெறியின் மூலம் ‘பொருள் மீட்பு வசதி முகாமைத்துவ உதவியாளர்கள்’ ஆகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். மேல் மாகாண திண்மக்கழிவு முகாமைத்துவ அதிகார சபை, கொழும்பு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல உள்ளூராட்சி மன்றங்களின் தலைமைத்துவத்தின் மேற்பார்வையின் கீழ் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபையின் முழுமையான கண்காணிப்பின் கீழ் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் கழிவு முகாமைத்துவ சுகாதாரப் பணியாளர்கள் சேவைகளில் இணைக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கும் இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் கெரவலப்பிட்டி கழிவு முகாமைத்துவப் பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழில் கல்வி ஆணைக்குழுவின் (TVEC) அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையினூடாக மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபையின் ‘மிஹிசரு’ கழிவு முகாமைத்துவ கள ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் கழிவு முகாமைத்துவம் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் திண்மக்கழிவு முகாமைத்துவத் துறையில் இணைக்கப்பட்டுள்ள ஊழியர்கள் ‘தொழில்முறை திறன் அபிவிருத்தி’ எனும் தொனிப்பொருளுக்கமைய பயிற்சி பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு வகையான பயிற்சிகளும் 2 மற்றும் 3 மாதங்களாக நடத்தப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளது. இப்பயிற்சிகள் யாவும் விரிவுரைகள், செயன்முறைகள் மற்றும் களப்பணி பயிற்சிகள் என மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி கோட்பாடு ரீதியான பயிற்சிகள் மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபையின் பிலியந்தலை, தும்போவில, கரதியான ‘மிஹிசரு’ கழிவு முகாமைத்துவ கள ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் ஆகியவற்றில் நடத்தப்பட்டது. கழிவுகளைக் கொண்டு கொம்போஸ்ட் பசளை உற்பத்தி, மின்சார உற்பத்தி, கடதாசி – பொலித்தீன் – பிளாஸ்டிக் கழிவுகளை மீள்சுழற்சி செய்யும் தொழிற்சாலைகள் அமைந்துள்ள ஹொரண, கெரவலப்பிட்டி, ஜாஎல போன்ற பிரதேசங்களுக்கு களப் பயணம் மேற்கொள்வதன் ஊடாக செயன்முறை பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிகளை நிறைவு செய்த தொழிலாளர்களுக்கு என்.வி.கியூ. 2 மற்றும் என்.வி.கியூ 3 தரச் சான்றிதழ் பயிற்சிநெறியை பூர்த்தி செய்த கழிவு முகாமைத்துவப் பிரிவு ஊழியர்களுக்கு ‘பங்குபற்றல் சான்றிதழ்’ வழங்கும் நிகழ்வு கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மேல் மாகாண சபையின் பிரதான மண்டபத்தில் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய தெற்காசிய ஒத்துழைப்பு சுற்றுச்சூழல் திட்டப் பணிப்பாளர் நாயகம் நொர்வூ வன்சுக் குறிப்பிடுகையில், தெற்காசியாவில் சதுப்பு நிலத்தைக் கொண்ட தலைநகரமாக கொழும்பு காணப்படுகிறது, இந்நகரில் அமைந்துள்ள நீர்வழிகளை பிளாஸ்டிக் கழிவுகள் அற்ற மற்றும் பல்லுயிர்த்தன்மை கொண்ட வகையிலும் அழகானதும் கவர்ச்சியானதுமான இடமாக மாற்றியமைக்கும் விரிவான வேலைத்திட்டமொன்று நிலைபேறான இரண்டு பிரதான கட்டமைப்புகளின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் பலவற்றின் கழிவு முகாமைத்துவப் பிரிவுகளில் பணிபுரிகின்ற ஊழியர்களுக்கு தொழில் திறன்விருத்தியை வழங்கி, அவர்களை கழிவு முகாமைத்துவத் துறையில் பெருமை மிக்க நபர்களாக ஊக்குவிக்கப்படுகின்றனர். அதன்படி அவர்களுக்கு என்.வி.கியூ. 2 மற்றும் என்.வி.கியூ. 3 தரச் சான்றிதழ் தகுதி பெற்றுக்கொடுக்கப்படும் என்றுள்ளார்.
இந்நிகழ்வில் மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபையின் பணிப்பாளர் நளின் மன்னப்பெரும மற்றும் அந்த அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் (தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி) ஆர். சண்முகப்பிரியா ஆகியோர் கருத்துத் தெரிவிக்கையில், நுண்ணறிவுப் போட்டி பரீட்சை நடத்தப்பட்டு அதில் சித்தி பெறுபவர்களுக்கு என்.வி.கியூ. தரச் சான்றிதழ் வழங்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினர். ஆகவே எமது வீடுகளில் காணப்படும் கழிவுகளை அகற்றுவதற்காக உள்ளூராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான ட்ராக்டர் வண்டிகளுடனோ அல்லது லொறிகளுடனோ வரும் துப்புரவுப் பணியாளர்கள் தொழில்முறை மட்டத்தில் பயிற்றுவிக்கப்பட்டு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் பெற்றுக்கொண்ட ஊழியர்கள் என்பதை மறந்து விடலாகாது. அதனால் எமது வீடுகளில் காணப்படும் கழிவுகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பாக அவர்கள் வழங்கும் ஆலோசனைகளையும் விழிப்புணர்வூட்டல்களையும் செவிமடுத்து அதன் வழி நடக்க வேண்டுமென்பதையும் கவனத்திற்கொள்வது அவசியம்.
அவர்கள் வெறுமனே ‘கழிவுபொருள் சேகரிப்பாளர்கள்’ அல்லர். அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கழிவு முகாமைத்துவம் தொடர்பான பயற்சி பெற்ற அரசாங்க ஊழியர்களாவர். கொழும்பு மாநகரம் உட்பட அதனை அண்டிய சுற்றுப்புறங்களிலும் பொலித்தீன் – பிளாஸ்டிக் கழிவுகள் உட்பட திண்மக் கழிவுகளை அகற்றும் பழக்கத்தை உரிய முறையில் சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்த இந்த வேலைத்திட்டம் அவர்களுக்கு மதிப்புமிக்கதொரு வாய்ப்பை வழங்கியுள்ளது எனலாம்.

என்.வி.கியூ 2 கற்கை நெறியில் கலந்து கொண்டு பங்குபற்றுதலுக்கான சான்றிதழைப் பெற்றுக் கொண்டோர்.




