மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் ‘பிளே ஓஃப்’ வாய்ப்பை தொடர்ந்து தக்கவைத்துள்ளது. எனினும் தற்போது 13 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது மற்ற போட்டிகளின் முடிவிலும் தங்கியுள்ளது.
கொல்கத்தா அணி தனது முதல் ஆறு போட்டிகளிலும் வெற்றியீட்டாத நிலையில் கடைசியாக ஆடிய ஏழு போட்டிகளில் ஆறில் வென்றே தனது வாய்ப்பை தொடர்ந்து தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா, ஈடன் கார்டனில் நேற்று முன்தினம் (20) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட மும்பை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க 20 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களையே பெற்றது.
எனினும் இலகுவான வெற்றி இலக்கை துரத்திய கொல்கத்தா அணியும் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் சற்று தடுமாற்றம் கண்டது.
மத்திய வரிசையில் மனிஷ் பாண்டெ (45) மற்றும் ரொவான் பவல் (40) கணிசமான ஓட்டங்களை பெற்றதன் மூலம் கொல்கத்தா 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 148 ஓட்டங்களை எட்டியது.
இம்முறை ஐபிஎல் தொடரின் புள்ளிப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இருக்கும் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைத்ராபாத் அணிகள் ஏற்கனவே பிளே ஓஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இந்நிலையில் அடுத்த ஓர் இடத்திற்கு அடுத்து இருக்கும் ஐந்து அணிகள் இடையிலே போட்டி நிலவுகிறது.



