சீனா 200 போயிங் ஜெட் விமானங்களை கொள்வனவு செய்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ள அதேநேரம் மேலும் 750 விமானங்களை வாங்குவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து கொண்டு அமெரிக்கா திரும்ப முன்னர் ஏயார் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அத்தோடு இரு நாடுகளும் சிறந்ததும், அற்புதமானதுமான வர்த்தக ஒப்பந்தங்களையும் மேற்கொண்டதாகவும் இரண்டு நாள் உச்சி மாநாட்டின் இறுதியில் அவர் தெரிவித்திருக்கிறார்.
சீனா பில்லியன் கணக்கான டொலர்கள் பெறுமதியான சோயா அவரையை வாங்கவிருப்பதால், தனது வர்த்தக ஒப்பந்தங்களால் அமெரிக்க விவசாயிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். இதேவேளை சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்தை ‘ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் மைல்கல் பயணம்’ என்று சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி ட்ரம்பின் அழைப்புக்கு அமைய சீன ஜனாதிபதி இலையுதிர் காலத்தில் வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்வார் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி கடந்த வௌ்ளியன்று உறுதிப்படுத்தியுள்ளார். பி.பி.சி



