தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் அனைத்து உள்ளூர் போட்டிகளையும் ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் பெய்து வரும் தொடர்ச்சியான மழை போட்டிகளை நடத்துவதில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நேற்று முன்தினம் (12) ரங்கிரி தம்புள்ளையில் நடைபெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்து மகளிர் ஏ அணிகளுக்கு இடையிலான முதலாவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டியும் 42 ஓவர்கள் மாத்திரம் வீசப்பட்ட நிலையில் கடும் மழையால் கைவிடப்பட்டது.
இந்நிலையில் தற்போதைய மழையுடனான காலநிலையை கருத்தில் கொண்டு அனைத்து போட்டிகளையும் ஒத்திவைக்க தீர்மானித்ததாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இதில் பிரதான கழக மட்டப் போட்டிகள் மற்றும் பி நிலை கழக மட்ட டி20 தொடர், அதேபோன்று ஆளுநர் கிண்ண போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதில் 12 அணிகள் பங்கேற்கும் பி நிலை கழக மட்ட டி20 தொடர் நேற்று (13) ஆரம்பமாகவிருந்த நிலையிலேயே அந்தத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினத்தில் மொத்தம் ஆறு போட்டிகள் நடைபெறவிருந்தன. எதிர்வரும் மே 27 ஆம் திகதி தொடரின் இறுதிப் போட்டி நடத்த ஏற்பாடாகி இருந்த நிலையில் அந்தத் தொடரின் கால அட்டவணை முழுமையாக மாற்றப்பட வேண்டி உள்ளது.
அதேபோன்று 14 அணிகள் பங்கேற்கும் பிரதான கழகங்களுக்கு இடையிலான டி20 தொடரும் நேற்றைய தினத்திலேயே ஆரம்பமாகவிருந்தது. இதில் முதல் நாளில் ஆறு போட்டிகள் நடைபெறவிருந்தன. அனைத்து ஆட்டங்களும் கொழும்பிலேயே நடத்த ஏற்பாடாகி இருந்தது. எனினும் கொழும்பில் நேற்று இடைவிடாது மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் மே 31 ஆம் திகதி கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் நடத்த ஏற்பாடாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தத் தொடர்களுக்கான மாற்றப்பட்ட போட்டி அட்டவணைகள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்று இலக்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.



