ரஷ்யாவுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் எண்ணெய்க் கப்பலொன்றின் சீன கப்டன் சந்தேகத்தின் பேரில் சுவீடனில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்டுள்ள இந்த எண்ணெய் கப்பலின் சீன கப்டன், போலி ஆவணங்களை வைத்திருந்ததாகவும், கப்பல் கடலில் பயணிக்கத் தகுதியானதா என்பது குறித்த சட்டங்களை மீறி இருக்கின்றார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருப்பதாக சுவீடன் அரச வழக்கறிஞர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், சுவீடன் எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் சிரியா கொடியுடன் கூடிய ஜின் ஹுய் கப்பல் பயணித்துக் கொண்டிருந்த போது எமது கடலோரக் காவல்படையினரும் பொலிஸாரும் ஏறினர். உக்ரைன் போருக்குப் பதிலடியாக ரஷ்யா மீது விதிக்கப்பட்ட மேற்கத்தியத் தடைகளைத் தவிர்ப்பதற்காக மொஸ்கோ பயன்படுத்திய கப்பல்களின் இரகசிய வலையமைப்புக்கு இக்கப்பல் சொந்தமானது என்று நம்பப்படுகிறது.
ரஷ்யா உருவாக்கியுள்ள இந்த இரகசிய கப்பல் வலையமைப்பை கலைப்பதற்கான முயற்சிகளை ஐரோப்பிய நாடுகள் அதிகரித்துள்ள சூழலில், இக்கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டில் சுவீடன் மேற்கொண்ட ஐந்தாவது நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.



