லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான ஒன்லைன் மூலம் வெளிநாட்டு வீரர்களின் பதிவு நாளை (08) ஆரம்பமாகவிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் சபை இணையதளத்தின் ஊடாக இந்தப் பதிவு எதிர்வரும் மே 18 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
ஆறாவது லங்கா பிரீமியர் லீக் டி20 தொடர் எதிர்வரும் ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் நான்கு மைதானங்களில் நடைபெறவுள்ளன. இந்தத் தொடர் பல சர்வதேச வீரர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் ஆடிய ஐந்து அணிகளிலும் ஒவ்வொரு அணியிலும் தலா ஆறு வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
எனினும் கடந்த முறை தொடரில் பங்கேற்பதற்கு 500இற்கு அதிகமான வெளிநாட்டு வீரர்கள் பதிவு செய்திருந்தனர். குறிப்பாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் முன்னணி வீரர்கள் பலரும் இடம்பெற்றிருந்தனர்.
எவ்வாறாயினும் இம்முறை லங்கா பிரீமியர் லீக் தொடர் நடைபெறும் சமகாலத்தில் மேலும் மூன்று சர்வதேச லீக் தொடர்கள் இடம்பெறவுள்ளன. மேஜர் லீக் கிரிக்கெட், தி ஹன்ட்ரட் மற்றும் கனடா கிளோபல் டி20 ஆகிய தொடர்கள் இடம்பெறுவதால் சிறந்த சர்வதேச வீரர்களை கவர்வது பெரும் சவாலாக அமையும். இந்தத் தொடர் 2025 பிற்பகுதியிலேயே நடத்த ஏற்பாடாகி இருந்தபோதும் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இலங்கையில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணத்திற்கு தயாராகும் வகையிலேயே வழக்கத்திற்கு மாறாக இந்தத் தொடர் ஆண்டின் நடுப்பகுதிக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடர் கொழும்பு, எஸ்.எஸ்.சி., ஆர். பிரேமதாச, பல்லேகல மற்றும் தம்புள்ளை என நான்கு மைதானங்களில் இடம்பெறவுள்ளன. ஐபிஜி குழுமத்தின் கூட்டாண்மையில் எல்.பி.எல். உரிமையைக் கொண்ட இந்தத் தொடர் இலங்கை கிரிக்கெட் சபையால் நடத்தப்படுகிறது. சர்வதேச வீரர்களை உள்ளடக்கிய இலங்கையின் முதன்மையான தொடராக அமையும் லங்கா பிரிமியர் லீக் 2020 இல் ஆரம்பிக்கப்பட்டது.



