சிரியாவிலிருந்து நாட்டிற்கு வரவிருக்கும் அவுஸ்திரேலியப் பெண்களும் சிறுவர்களும் அடங்கிய குழுவில் ஐ.எஸ்.ஐ.எல் ஆயுதக் குழுவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்று அவுஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸ் ஆணையர் கிரிஸ்ஸி பாரெட் தெரிவித்துள்ளார். நான்கு பெண்களும் ஒன்பது சிறுவர்களும் அடங்கிய 13 அவுஸ்திரேலியர்கள், சிரியாவிலிருந்து மெல்போர்ன் மற்றும் சிட்னி விமான நிலையங்களுக்கு உள்ளூர் நேரப்படி இன்று மாலை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்தே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இக்குழுவில் உள்ள சிலர் வந்தவுடன் காவலில் எடுக்கப்படுவார்கள் என்றும், மற்றவர்கள் தீவிர விசாரணைக்கு உள்ளாவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேநேரம் குழந்தைகளுக்கு உளவியல் ஆதரவு வழங்கப்படும் என்றும், வன்முறைத் தீவிரவாதத்தை எதிர்ப்பது மற்றும் சமூக ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் திட்டங்களில் அவர்கள் பங்கேற்பார்கள் என்றும் அவர் மேலும் கூறினார். இந்தப் பெண்களும் சிறுவர்களும் சிரியாவின் வடகிழக்கில் உள்ள ரோஜ் முகாமில் தங்கியிருந்தவர்களாவர். சிரியாவுக்குப் பயணம் செய்ததற்காக இப்பெண்களை கண்டித்த உள்துறை அமைச்சர் டோனி பர்க், குற்றங்கள் செய்ததாகக் கண்டறியப்பட்ட எவரும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.



