பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 சர்வதேச போட்டியிலும் 21 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை மகளிர் அணி மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரை 2–0 என கைப்பற்றியது.
சில்ஹட்டில் நேற்று (30) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை அணிக்கு அணித் தலைவி சமரி அத்தபத்து ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையாக அதிரடி காட்டினார். 37 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 6 பௌண்டரிகளுடன் 42 ஓட்டங்களைப் பெற்றார்.
வேகமாக ஆடிய ஹர்ஷதா சமரவிக்ரம 29 பந்துகளில் 4 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 49 ஓட்டங்களைப் பெற்றார்.
இதன்மூலம் இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றது.
இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த பங்களாதேஷ் மகளிர்கள் ரன் அவுட் முறையில் முக்கிய மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்து இலக்கை எட்டுவதில் சிக்கலை ஏற்படுத்தியது.
குறிப்பாக முதல் வரிசையில் வந்த ஷர்மின் அக்தர் வெற்றிக்காக கடைசி வரை போராடினாலும் வேகமாக துடுப்பெடுத்தாட தவறினார். அவர் ஆட்டமிழக்காது 44 ஓட்டங்களைப் பெற்றபோதும் 47 பந்துகளுக்கு முகம்கொடுத்திருந்தார்.
இதனால் பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களையே பெற்றது.
பந்துவீச்சில் கவிஷா டில்ஹாரி 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் அணி ஏற்கனவே ஒருநாள் தொடரை வென்ற நிலையிலேயே தற்போது டி20 தொடரையும் கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (02) சில்ஹட்டில் நடைபெறும்.



