புதிய பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஜனாதிபதியிடம் நற்சான்றுபத்திரம் கையளிப்பு

2 Min Read

இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கலாநிதி நய்யார் நசீர் [Major General (Retd) Dr Nayyar Naseer, HI (M)], நேற்று (20) ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற உத்தியோகபூர்வ விழாவின் போது இலங்கை ஜனாதிபதியிடம் தனது நியமனக் கடிதத்தைச் (Credentials) சமர்ப்பித்தார்.

இந்தச் சந்திப்பின் போது, பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அன்பான வாழ்த்துக்களையும் நல்விருப்பங்களையும் இலங்கை ஜனாதிபதிக்கும் நாட்டு மக்களுக்கும் உயர்ஸ்தானிகர் நய்யார் நசீர் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால சகோதரத்துவ உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்கும் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் கலாசாரப் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் பாகிஸ்தான் கொண்டுள்ள உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கலாநிதி நய்யார் நசீர் அவர்கள் பாகிஸ்தான் இராணுவத்தில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக முன்மாதிரியான சேவையாற்றிய ஒரு சிறந்த பின்னணியைக் கொண்டவர். நாட்டிற்கு அவர் ஆற்றிய சிறப்பான சேவையைப் பாராட்டி, அவருக்கு ‘ஹிலால்-இ-இம்தியாஸ்’ (இராணுவம்) [Hilal-e-Imtiaz (Military)] விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு காலாட்படையில் இணைந்த அவர், 35 வருட கால சிறப்பான சேவைக்குப் பின்னர் 2025 இல் ஓய்வு பெற்றார்.

அவரது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையில், தெற்கு வஜிரிஸ்தானில் (முன்னாள் FATA) பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது தனது காலாட்படைப் படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கியமை, சியாச்சின் படைப்பிரிவு (Siachen Brigade) மற்றும் ஒரு காலாட்படை பிரிவின் தளபதியாகப் பணியாற்றியமை போன்ற முக்கிய பொறுப்புக்கள் அடங்கும்.

இவர் குவெட்டா கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரி, ஈரானின் தெஹ்ரான் ஆயுதப்படை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரி, இஸ்லாமாபாத் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யிலுள்ள நேஷனல் டிபென்ஸ் யுனிவர்சிட்டி ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்.

மேலும், அவர் பாகிஸ்தான் இராணுவ அகாதமியில் போதகராகவும், குவெட்டா கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் சிரேஷ்ட போதகராகவும் பணியாற்றியுள்ளார்.

பாரசீக மொழியில் டிப்ளோமா பெற்றுள்ள அவர், இரண்டு முதுகலைப் பட்டங்களையும், அத்துடன் ‘ஆளுமை மற்றும் பொதுக் கொள்கை’ (Governance and Public Policy) துறையில் எம்.பில் (MPhil) மற்றும் கலாநிதி (PhD) பட்டங்களையும் பெற்றுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *