அவுஸ்திரேலியாவின் யுரேனியத்தை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தவற்கு இரண்டு நாடுகளும் நேற்று ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
இந்தியாவின் அணுசக்தி கைத்தொழில் துறைக்கு அவுஸ்திரேலிய யுரேனியத்தைப் பயன்படுத்தவென ஏற்றுமதி செய்வதற்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, முக்கிய கனிமங்கள் மற்றும் பசுமை ஹைட்ரஜன் ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கும் இரு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளன. 2047ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தித் திறனை அடையும் இலக்கை எட்டுவதற்காக அவுஸ்திரேலிய யுரேனிய இருப்புகள் உதவும் என இந்தியா நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த சூழலில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மெல்போர்னில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவுஸ்திரேலிய பிரதமர், அவுஸ்திரேலியாவும் இந்தியாவும் நெருங்கிய பங்காளர்கள் மாத்திரமல்லாமல் நெருங்கிய நண்பர்களுமாவர். புதைபடிம எரிபொருள் அல்லாத மின் உற்பத்தித் திறனின் பங்கை அதிகரிக்க உதவும் வகையில், அவுஸ்திரேலியாவின் யுரேனியத்தை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய இந்த ஏற்பாடு எளிதாக்குகிறது. இது அவுஸ்திரேலிய வளங்கள் துறைக்கு ஒரு கூடுதல் சந்தையையும் பெற்றுக் கொடுக்கிறது என்றுள்ளார். ரொய்ட்டர்ஸ்




