தலவாக்கலை — வட்டகொட பகுதியைச் சேர்ந்த குழுவினர் கொட்டகலை நகரில் உள்ள மண்டபம் ஒன்றில் நேற்று (17) திருமண விழா ஒன்றை நடத்தியுள்ளனர். இதன்போது, மாலை 4.00 மணியளவில் திருமணத்திற்கு வந்திருந்த, மதுபோதையிலிருந்த இருதரப்பினரிடையே பயங்கர மோதல் வெடித்துள்ளது.
அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாகச் சென்று மோதலைச் சமரசம் செய்ய முயன்றுள்ளனர். எனினும், மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரும் ஒன்றாக இணைந்து அந்த இரு பொலிஸ் அதிகாரிகளையும் தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து, காயமடைந்த அதிகாரிகளை மீட்கத் திம்புள்ளை-பத்தனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் மேலதிக பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால், வன்முறைக் கும்பல் அவர்களையும் விட்டுவைக்காமல் தாக்குதல் நடத்தியுள்ளது.
பொலிஸார் கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தாக்குதலுடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்களைக் கைது செய்தனர்.
பொலிஸார் தாக்கப்படுவதைக் கண்ட கொட்டகலை நகர மக்கள் உடனடியாகச் செயற்பட்டு, வன்முறையில் ஈடுபட்ட மேலும் 3 சந்தேகநபர்களை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தற்போது மொத்தம் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வதிரடி மோதலில் காயமடைந்த 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் மோதலில் காயமடைந்த சந்தேகநபர்கள் மூவர் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் காரணமாக கொட்டகலை நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், பதற்றமான சூழலும் உருவானது. இதனையடுத்து நிலமையைக் கட்டுக்குள் கொண்டுவரத் தலவாக்கலை, லிந்துலை மற்றும் நானுஓயா ஆகிய பொலிஸ் நிலையங்களில் இருந்து மேலதிக பொலிஸ் படையினர் கொட்டகலை நகருக்கு அவசரமாக அழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இச்சம்பவம் குறித்து திம்புள்ளை-பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



