இலங்கை தபால் திணைக்களத்தின் மனிதவளக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த தபால் ஊழியர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வாக 192 பதில் உப தபால் அதிபர்களை (Sub-Postmasters) நிரந்தர நியமனம் செய்யும் விசேட நிகழ்வு நாளை (18) கொழும்பில் நடைபெறவுள்ளது.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் வழிகாட்டலின் கீழ், கொழும்பிலுள்ள பிரதான தபால் தலைமையகத்தில் நாளை (18) காலை இந்த நியமனப் பத்திரங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கப்படவுள்ளன.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பதில் கடமையாற்றி வந்த தபால் ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்காக சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமையவே இந்த நியமனங்கள் வழங்கப்படுகின்றன. இதன்படி, 2020 ஒக்டோபர் 15 இற்கு முன்னர் பதில் கடமையில் அமர்த்தப்பட்டிருந்த 196 பேரில், தகைமைகளைப் பூர்த்தி செய்த 192 பேருக்கு இந்த நிரந்தர ஓய்வூதியத்துடனான அரச நியமனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
உப தபால் நிலையங்களை நடத்துவதற்கான கட்டிடங்களை அந்தந்த உப தபால் அதிபர்களே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற விதிமுறைக்கு அமைய, அந்தக் கட்டிடங்களுக்காக அரசாங்கத்தினால் இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த ரூ. 1,500 மாதாந்தக் கொடுப்பனவை, தற்போதைய அரசாங்கம் ரூ 7,500 வரை (ஐந்து மடங்கு) பாரியளவில் அதிகரித்துள்ளது. இக்கொடுப்பனவு உயர்வு கடந்த 2025 ஏப்ரல் 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தபால் திணைக்களத்தின் ஆள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன
நிலவிய 600வெற்றிடங்களுக்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மூலம் கடந்த ஏப்ரல் மாதம் 297 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன. இதன் எஞ்சிய 303 புரோப்பாடுகளுக்கான நியமனங்கள் எதிர்வரும் ஜூலை மாதம் வழங்கப்படவுள்ளன.
மத்திய தபால் பரிவர்த்தனை (Central Mail Exchange) உட்பட நாடு முழுவதுமுள்ள தபால் நிலையங்களில் நீண்டகாலமாகப் பதிலீட்டு அடிப்படையில் கடமையாற்றிய 732 ஊழியர்கள் கடந்த 2025 ஒக்டோபரில் நிரந்தரமாக்கப்பட்டனர்.
திறந்த போட்டிப் பரீட்சை மற்றும் செய்முறைத் தேர்வுகள் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 35 புதிய தபால் வாகனச் சாரதிகளுக்கு கடந்த 2025 நவம்பரில் நியமனங்கள் வழங்கப்பட்டன.
1921ஆம் ஆண்டில் வெறும் 6 உப தபால் நிலையங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சேவையானது, இன்று நாடு முழுவதும் 3,410 அங்கீகரிக்கப்பட்ட உப தபால் நிலையங்களுடன் பொதுமக்களுக்கு மிக நெருக்கமானதொரு மாபெரும் அரச சேவையாக விரிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



