இலங்கை கடற்படையின் முன்னாள் அதிகாரியான யோஷித ராஜபக்ஷ, நிதி முறைகேடு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாகவும், உடந்தையாகவும் இருந்தமைக்காக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சான்றுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் இன்று (17) அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை வாக்குமூலம் அளிப்பதற்காக ஆணைக்குழுவின் தலைமையகத்திற்கு வருகை தந்திருந்த நிலையிலேயே, அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவுக்கு மாணவர் அதிகாரிகளை இணைத்துக்கொள்ளும் போது, அதற்குரிய முறையான தகைமைகளைக் கொண்டிராத போதிலும், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அவர் அதிகாரியாக இணைத்துக் கொள்ளப்பட்டமை மற்றும் கடற்படை நடைமுறைகள் மற்றும் சட்டதிட்டங்களை மீறி, அரசாங்க நிதியைப் பயன்படுத்தி பிரித்தானிய அரச கடற்படைக் கல்லூரியில் உயர் பயிற்சிப் பாடநெறியொன்றைப் பெற்றுக்கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ, கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



