காலிமுகத்திடலில் மீட்கப்பட்ட மாணவன் உயிரிழப்பு

1 Min Read

காலிமுகத்திடல் கடலில் நேற்று (10) மாலை நீராடச் சென்ற ஆறு சிறுவர்கள் நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களில் மீட்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலிமுகத்திடல் கடற்பரப்பில் நீராடச் சென்ற 6 சிறுவர்கள் அலைகளின் இழுவைக்குப்பட்டு நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த பொதுமக்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து உடனடியாகச் செயற்பட்டு, நீரில் மூழ்கிய சிறுவர்களில் 5 சிறுவர்களை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட சிறுவர்கள் அவசரமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட சிறுவர்களில் 2 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பெற்று வந்த மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

ஏனைய 3 சிறுவர்களும் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தின் போது நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய மற்றுமொரு சிறுவனைத் தேடி, பொலிஸ் ஜீவிதாரக்ஷக (உயிர் காக்கும்) பிரிவினரும் கடற்படை சுழியோடிக் குழுவினரும் இணைந்து தீவிர கூட்டுத் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போதைய கடல் சீற்றம் காரணமாகப் பிள்ளைகளுடன் கடற்கரைக்கு வருவோர் தங்களது பிள்ளைகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *