பெருந்தோட்ட மக்களை வலுப்படுத்தாமல் தேயிலைத்துறையை மீட்டெடுக்க முடியாது

2 Min Read

பெருந்தோட்டங்களில் உழைக்கும் மக்களை வலுப்படுத்தாமல் தேயிலைக் கைத்தொழிலின் எதிர்காலப் பயணத்தை ஒருபோதும் முன்னெடுக்க முடியாது என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டுக்கான புதிய தேயிலை அறுவடை விழா, நேற்று (31) இரத்தினபுரியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சப்ரகமுவ மஹா சமன் தேவாலய வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், இலங்கையின் அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் மிக முக்கிய துறையான தேயிலை உற்பத்தியில், சிறு தேயிலை உற்பத்தியாளர்களின் பங்களிப்பு அளப்பரியது. இதில், நாட்டின் ஒட்டுமொத்த சிறு தேயிலை உற்பத்தியில் 60 சதவீதமான உற்பத்திகள் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்தே பெறப்படுவதாக அவர் தெரிவித்தார்.

எமது நாட்டின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்கும் தேயிலைக் கைத்தொழிலுக்கு ஆசீர்வாதம் வேண்டி நடத்தப்படும் இந்த புதிய தேயிலை அறுவடை விழாவில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்வதை பெருமதிப்பாகக் கொள்கிறேன்.

உலகெங்கிலும் ‘சிலோன் டீ’ (Ceylon Tea) என்ற வர்த்தக நாமத்தைக் கொண்டு சேர்ப்பதில் முன்னின்று உழைத்த இலங்கை தேயிலை சபைக்கு, 50 ஆண்டுகள் நிறைவடையும் பொன் விழா ஆண்டு இவ்வருடமாகும்.

இதைக் குறிக்கும் முகமாக, கடந்த மே 21 ஆம் திகதி உலக தேயிலை தினத்தை முன்னிட்டு கொழும்பில் பிரம்மாண்ட நடைபவனியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

‘சிலோன் டீ’ என்ற உலகப் புகழ்பெற்ற வர்த்தக நாமத்தின் பின்னால் இருப்பது, இந்நாட்டின் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர் மக்களினதும் மற்றும் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களினதும் கண்ணீரும், செந்நீரும், வியர்வையுமாகும்.

இத் தோட்ட சமூகத்தின் வீட்டுவசதி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளையும் அவர்களின் வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்துவதே எமது அமைச்சின் முதன்மையான பொறுப்பும் கொள்கையுமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பு அதிகாரியும், முன்னாள் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினருமான புஷ்பகுமாரன் திசாநாயக்க மற்றும் தேயிலைச் சபையின் பணிப்பாளர் உட்பட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *