யாழ். பருத்தித்துறை கடலிலிருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமற்போன நான்கு மீனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்தியாவின் உதவியை பெற்றுக் கொள்ளும் அதேவேளை, சர்வதேச கடலில் தேடுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
காணாமற்போன மீனவர்களை எமது கடற்பரப்பிலும் சர்வதேச கடற்பரப்பிலும் தேடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தனியார் படகுகள் மூலம் சர்வதேச கடல் எல்லைகளில் தேடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை கடலில் மீன்பிடிக்கச் சென்று இதுவரை திரும்பாத நான்கு மீனவர்கள் தொடர்பாக எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
குறித்த சம்பவமானது மிகவும் வேதனையானது. தமது உறவுகளைக் காணாது தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆறுதலையும் தெரிவிக்க விரும்புகிறேன்.
குறித்த மீனவர்கள் தொடர்பில் இலங்கை கடற்படையினரின் ராடார் கருவிகளின் உதவியுடனும் இலங்கை கடல் எல்லைப் பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
எல்லைக் கடற்பரப்புகளில் மேற்கொண்ட தேடுதலில் குறித்த மீனவர்கள் எவரும் கண்டறியப்படாத நிலையில், இலங்கைக்கான இந்தியத் தூதரகம் ஊடாக இந்தியக் கடல் எல்லைப் பரப்புகளில் தேடுவதற்கான உதவியும் அனுமதியும் போடப்பட்டுள்ளது. அமைச்சு மட்டத்தில் மீனவர்களைத் தேடுவதற்கான அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடலில் காற்றின் வேகம் அதிகமாகக் காணப்படுவதால், தேடுதல் பணிகள் தடைப்படாமல் இருப்பதற்குப் படையினரின் பூரண ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளது.
நேற்றைய தினமும் (31) தீவகக் கடலிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்கள், பலத்த காற்றினால் திசைமாறிச் சென்ற நிலையில், உடனடியாக எமது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுச் சில மணித்தியாலங்களில் அவர்கள் பாதுகாப்பாக கரை திரும்பியுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



