கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் கடான – வெலிகம்பிட்டிய பகுதி வழியாக முன் சக்கரத்தை உயர்த்தி, அதிக சத்தம் எழுப்பி, பொதுமக்கள் மற்றும் பிற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாகவும் இடையூறாகவும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டியை அபாயகரமாக இயக்கிய 6 இளைஞர்கள் நேற்று முன்தினம் 30ஆம் திகதி அதிகாலை கடான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் கடான, படகம பகுதியைச் சேர்ந்த 20 முதல் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லாததுடன், அவர்கள் பயன்படுத்திய அனைத்து மோட்டார் சைக்கிள்களும் இலக்கத் தகடுகள் இன்றியே இயக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் ராகம நீதிமன்ற வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



