விலக்கப்பட்ட விடயமல்ல மாதவிடாய்!

1 Min Read

மாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் இயற்கையான, உயிரியல் ரீதியான ஒரு நிகழ்வு. ஆனால், இன்றும் நம் சமூகத்தில் அதனைப் பற்றிப் பேசுவது ஒரு விலக்கப்பட்ட பொருளாகவே பார்க்கப்படுகிறது. ஆண்டுதோறும் மே 28 அன்று அனுஷ்டிக்கப்படும் “உலக மாதவிடாய் சுகாதார தினம்”, இந்த மௌனத்தை உடைத்து பெண்களின் ஆரோக்கியத்தை முன்னிறுத்த வேண்டியதன் அவசியத்தை நமக்கு மீண்டும் நினைவூட்டுகிறது.

2026ஆம் ஆண்டின் உலகளாவிய தொனிப்பொருளான”ஒன்றாக இணைந்து ஒரு மாதவிடாய் -நட்பு உலகை உருவாக்குவோம்” (Period FriendlyWorld) என்பது வெறும் பேச்சோடு நின்றுவிடக் கூடாது. ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சி சீராக இருப்பது, அவளது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தின் கண்ணாடி போன்றதாகும்.

ஒழுங்கற்ற மாதவிடாய், கடுமையான வயிற்று வலி மற்றும் அதிகப்படியான இரத்தப்போக்கு ஆகியவை வெறும் ‘பெண்கள் சந்திக்கும் சாதாரண வலி’ அல்ல. அவை பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS), தைரொய்டு குறைபாடுகள் அல்லது கடுமையான இரத்தச் சோகை (Anaemia) போன்ற தீவிர மருத்துவப் பிரச்சினைகளின் எச்சரிக்கையாக இருக்கலாம்.

பெண்கள் தங்கள் உடலில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். ஹோர்மோன் சமநிலையைக் கண்டறியும் FSH, LH போன்ற பரிசோதனைகளைச் சுழற்சியின் 2-3ஆம் நாட்களிலும், இரும்புச்சத்து மற்றும் இரத்த அளவை (Ferritin & CBC) மாதவிடாய் முடிந்த பின்னரும் பரிசோதிப்பது முறையான தீர்வுக்கு வழிவகுக்கும்.

பாடசாலைகள், பணியிடங்கள் மற்றும் வீடுகளில் மாதவிடாய் குறித்த அவமான உணர்வை ஒழித்து, திறந்த உரையாடல்களை உருவாக்க வேண்டும். தரமான சுகாதாரப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதையும், முறையான கழிப்பறை வசதிகளையும் உறுதிப்படுத்துவது ஒரு நாகரிக சமூகத்தின் கடமையாகும்.

மாதவிடாய் ஆரோக்கியம் என்பது வெறும் பெண்களுக்கான விவகாரம் அல்ல; அது ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த பொதுச் சுகாதாரத்தின் அடிப்படை. மூடநம்பிக்கைகளைத் தகர்த்து, மருத்துவ விழிப்புணர்வை ஏந்தி, நம் வீட்டுப் பெண்களின் ஆரோக்கியத்தைப் பேண இந்நாளில் உறுதியேற்போம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *