லங்கா பிரீமியர் லீக் தொடருக்கு 250 வெளிநாட்டு வீரர்களுக்காக 700 இற்கும் அதிகமான வீரர்கள் விண்ணப்பித்திருப்பதாக அந்தத் தொடரின் பணிப்பாளர் சமன்த தொடன்வெல குறிப்பிட்டுள்ளார்.
ஒன்லைன் முறையில் வெளிநாட்டு வீரர்களை பதிவு செய்வது கடந்த புதன்கிழமை (20) நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. இதற்கு பல வெளிநாட்டு வீரர்களும் விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக பாகிஸ்தான், பங்களாதேஷ், தென்னாபிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து வீரர்கள் அதிக ஆரவம் காட்டியுள்ளனர். எவ்வாறாயினும் 250 வீரர்கள் வரையே பதிவு செய்யவிருப்பதாக தொடன்வெல குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தொடரில் இலங்கையின் 160 முன்னணி வீரர்களை இணைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதில் கண்டி அணியில் இருந்த தசுன் ஷானக்க மற்றும் ஜப்னா அணியில் இருந்த எஷான் மாலிங்க ஆகியோர் காலி அணிக்காக விளையாடவிருப்பதோடு காலிக்கு ஆடிய பானுக்க ராஜபக்ஷ மற்றும் கொழும்பு அணியில் இருந்த துனித் வெள்ளாலகே, ஜப்னா அணிக்கு மாறியுள்ளனர்.
அதேபோன்று ஜப்னா அணியில் இருந்த குசல் மெண்டிஸ் மற்றும் கண்டியில் இருந்த கமிந்து மெண்டிஸ் இம்முறை கொழும்பு அணியுடன் ஒப்பந்தமாகியுள்ளனர். கண்டி அணியில் ஆடிய அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் வனிந்து ஹசரங்க இம்முறையும் அந்த அணியிலேயே ஆடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லங்கா பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஜூலை 17 ஆம் திகதி ஆரம்பமாகவுளள்து. தொடரின் இறுதிப் போட்டி ஓகஸ்ட் 8 இல் கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இம்முறை தொடர் கொழும்பு எஸ்.எஸ்.சி., தம்புள்ளை மற்றும் கண்டி மைதானங்களில் நடைபெறவுள்ளன.



