தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படும் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய், இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கருக்கு அவசரக் கடிதம் எழுதி, கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த ஆறு தமிழக மீனவர்கள் நேற்று (12.05.2026) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் தமிழக கடலோர மீனவக் கிராமங்களில் மீண்டும் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பதவியேற்ற சில நாட்களிலேயே இந்த விவகாரத்தில் துரிதமாக தலையிட்டுள்ள முதலமைச்சர் விஜய், தனது கடிதத்தில் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான கைது சம்பவங்கள் மனிதாபிமானக் கவலைக்குரியவை என குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போது 54க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் வாடிவருவதோடு, 264 மீன்பிடிப் படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பி வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு, இந்த கைது சம்பவங்கள் பெரும் வாழ்வாதார நெருக்கடியாக மாறியுள்ளது. கடலில் எல்லைத் தாண்டியதாகக் கூறி மீனவர்கள் கைது செய்யப்படுவது, தற்போது மாதந்தோறும் நடைபெறும் வாடிக்கையான நிகழ்வாகவே மாறியுள்ளது என்றும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.



